Breaking
Sat. Jul 27th, 2024

க.பொ.த. உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ளன.

செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி திங்கட்கிழமை மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட விருப்பதாக கல்வி அமைச்சின் பாடசாலைகள் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை முதலாவது கட்டமாக மதிப்பீடு செய்யும் மத்திய நிலையங்களாக செயற்படும் 10 பாடசாலைகள் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் மத்திய நிலையங்களாக செயற்படும் 34 பாடசாலைகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் மத்திய நிலையங்களாக செயற்படும் 34 பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பமாகும். கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை முதலாவது கட்டமாக மதிப்பீடு செய்யும் மத்திய நிலையங்களாக செயற்படும் 10 பாடசாலைகள் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் இன்றுடன் ஆரம்பமாகவுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் இரண்டாம் கட்டப் பணிகள் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல்

27ஆம் திகதிவரை நடைபெறவிருப்பதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Post