Breaking
Sat. Jul 27th, 2024

M.ஷாமில் முஹம்மட்

பொதுபலசேனா அமைப்பிற்கும் ஹஜ் முகவர்கள் சங்கத்திற்கும் இடையிலான  சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றது என பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திலந்த விதானகே  தெரிவித்துள்ளார்.

   “ஹஜ் விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த குழுவினரே இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார் . ஹஜ் முகவர்களின் வேண்டுகோளின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது  ஹஜ் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த விடயத்தில் பொது பல சேனாவை   தலையிடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவும் திலந்த விதானகே  தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை அவர்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் .

குறித்த கடும்போக்கு அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளது போன்று நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தால் இது மிகவும் கேவலமான நிலையாகும் , வியாபாரம்- முகவர்களினதும் அரசியல்வாதிகளினதும் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் ஹஜ் ஒழுங்கு என்று வரும்போது அது தொடர்பான அனைத்தும் முஸ்லிம் சமூகம் சார்ந்ததும் ,இஸ்லாம் சார்ந்ததுமாகும் ஆகவே இது தொடர்பாக எடுக்கும் எந்த நடவடிக்கையும் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் என்பது கவனத்தில் கொள்ளப் படவேண்டும்

ஹஜ்ஜை வியாபாரமாக்கி செயல்பட்டுவரும் முகவர்கள் தமக்கிடையிலான  வியாபார போட்டி காரணமாக ஹஜ் கடமையையும் , அதற்கான ஒழுங்குகளையும் முழு வியாபாரமாக்கி செயல்படுவதையே இத்தகைய செயல்பாடுகள் காட்டுகிறது . சிரேஷ்ட அமைச்சர் பௌசி மற்றும் பிரதியமைச்சர் காதர் ஆகியோருக்கு இடையிலான ஹஜ் வியாபார போட்டி முஸ்லிம் சமூகத்தையும் அதன் உரிமைகளையும் மாற்று சக்திகளிடம்  அடகு வைக்கும் நிலைக்கு சென்றுள்ளது .

இந்த சர்ச்சை தொடர்பில் அண்மையில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு கூட பெளத்த சாசன அமைச்சின் செயலாளரே ஹஜ் கோட்டாக்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற அதிகாரத்தை அவருக்கு வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது .

இஸ்லாமிய கடமைகளில் இறுதியான புனித கடமையான ஹஜ் கடமையை முஸ்லிம்களுக்கு ஒழுங்கு செய்யும் நடவடிக்கைகள் மோசடி மற்றும் ஒழுங்கீனங்கள் நிறைந்ததாக  உள்ளமை அவதானிக்கப்பட்டுவருகிறது . உயர்வான இறுதிக் கடமையை உளபூர்வமாக செய்யமுடியாது போகும் அளவுக்கு ஹஜ் பயணம் முழு வியாபாரமாக ஆக்கப்பட்டுள்ளது . அதை மேட்கொள்ளும் அரசியல் வாதிகள் மற்றும் முகவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள போட்டி முழு முஸ்லிம் சமூகத்தையும் வெளிச்  சக்திகளிடம் அடிமைகளாக்கும் நிலைக்கே  கொண்டு செல்கின்றது .

‘ஹஜ் வியாபார போட்டி’ மோசமான விளைவுகளை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படுத்தி வருகின்றது ,  இந்த நிலை நீடித்தால் மிக மோசமான விளைவுகளை முஸ்லிம் சமூகம் சந்திக்கலாம் என்பதை கருத்தில்கொண்டு முஸ்லிம்  சிவில் சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டும். தவறும்போது எமது கடிவாளத்தை நாங்களே எதிராளிகளிடம் கொடுத்துவிட்டு அடிமையாகும் நிலைக்கே இட்டுசெல்லும்.

Related Post