இடது: மாணவர் அகமது | வலது: மார்க் ஸக்கர்பெர்க் | கோப்புப் படங்கள்
கடந்த சில தினங்களாக சிறுவன் அகமது குறித்த செய்திகள் பரவலாக பேசப்படுகின்றன. அமெரிக்காவில் வசிக்கிறார் சிறுவன் அகமது. இவர் கைக்கடிகாரம் ஒன்றை தானே செய்து அதை பள்ளிக்கு எடுத்துச் சென்றததற்காக போலீஸாரால் கைவிலங்கிடப்பட்டவர்.
எல்லாம் ‘பெயர்க்காரணம்’ என சமூகவலைத்தளங்களில் பலர் கொந்தளித்துக் கொண்டிருக்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் ரத்தினச் சுருக்கமாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டு தனது ஸ்டேட்டஸை நிரூபித்துள்ளார்.
இதோ அந்த முத்தான மூன்று வரி ஸ்டேட்டஸ்:
“ஒரு கடிகாரத்தை தானே வடிவமைத்து அதை பள்ளிக்கூடத்துக்கு எடுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்ட 14 வயது, டெக்சாஸ் மாகாண சிறுவன் அகமதுவின் கதையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
தனித்திறனும், அதை செயல்படுத்தும் தீர்க்கமும் வரவேற்கத்தக்கது. அதைக் கொண்ட நபருக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமே தவிர கைவிலங்கல்ல. எதிர்காலம் அகமது போன்ற நபர்களுடையது.
அகமது, எப்போதாவது நீங்கள் ஃபேஸ்புக் அலுவலகம் வர விரும்பினீர்கள் என்றால், நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்” எனப் பதிவு செய்துள்ளார்.
யார் இந்த அகமது?
அமெரிக்காவின் வசிக்கும் சிறுவன் அகமத். இவர் தனது வீட்டிலேயே ஒரு கடிகாரத்தை செய்துள்ளார். அதை தனது வகுப்பாசிரியரிடம் காண்பிக்க வேண்டும் என்பதற்காக அக்கடிகாரத்தை டெக்சாஸில் உள்ள தனது பள்ளிக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அதனை பார்த்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் சந்தேகமடைந்துள்ளனர்.
மேலும், போலீஸுக்கு தகவல் தந்துள்ளனர். இதையடுத்து போலீஸார் அச்சிறுவனை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர், சிறுவன் மீது தவறு ஏதும் இல்லையென்றும் அது உண்மையிலேயே கடிகாரம் தான் எனவும் போலீஸார் தெரிவித்தார். மேலும் அகமது விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறினர்.
ஒபாமாவின் சபாஷ்:
அகமதுவின் கைது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில், “அகமது, நீ தயாரித்த கடிகாரத்தை வெள்ளை மாளிகைக்கு எடுத்து வர விரும்புகிறாயா? உன்னை போன்று அறிவியலில் ஆர்வமுள்ள சிறுவர்கள் நிறைய பேரை அமெரிக்கா ஊக்குவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.