ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மேல் சபை, கீழ் சபை மற்றும் ராணுவம் மூன்றும் தன்னுடைய தரப்பிற்கு ஒரு அதிபர் வேட்பாளரை மார்ச் 17-ம் தேதிக்கு முன்பாக தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மார்ச் 17-அன்று பாராளுமன்றத்தில் அந்த பெயர்களை தாக்கல் செய்யப்படும்.
பின்னர் 664 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் வாக்குப் பதிவு நடைபெறும். அதிக வாக்குகள் பெறுபவர் அதிபராக தேர்வு செய்யப்படுவார். மற்ற இருவரும் துணை அதிபராக பொறுப்பேற்பார்கள்.
இரு சபைகளிலும் ஆங்சான் சூகியின் கூட்டணிக்கே பெரும்பான்மை இருப்பதால் அந்த கூட்டணியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாகவும், அதேபோல் இரு துணை ஜனாதிபதிகளில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், ஆங்சான் சூகி நிச்சயம் அதிபர் ஆக இருக்கமாட்டார் என்று மியான்மர் பாராளுமன்றம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இது குறித்து தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கீழ்சபை உறுப்பினர் கியாவ் திஹா கூறுகையில், “ஆங்சான் சூகி பிரதமர் ஆக முடியாது, ஆனால் அது ஒரு பிரச்சனை இல்லை. அவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவார். எங்களை கட்டுப்படுத்தும் ஒருவர் அவர்தான்” என்று கூறினார்.
இருப்பினும் ஆங்சான் சூகியின் முக்கிய உதவியாளரான ஹ்தின் க்யாவை அதிபர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார் சூகி. 69 வயதாகும் ஹ்தின் கியாவ் எழுத்தாளராகவும், முக்கிய ஜனநாயக ஆலோசகராகவும் உள்ளார். இதனை பாராளுமன்றத்தில் இன்று அவரது கட்சி உறுதி செய்துள்ளது.