இந்த வருட ஹஜ் புனித கடமைக்கு வரும் லட்சக்கணக்கான ஹாஜிகளின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக ஐந்து நாள் இரத்த தான முகாம் நடந்தது. இந்த நிகழ்வில் புனித மெக்கா பள்ளியின் இமாம் சுதைஸ் அவர்கள் தனது இரத்தத்தையும் கொடுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இது போன்ற இரத்ததான முகாம்கள் ரியாத், ஜெத்தா, தம்மாம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டு தேவைக்கு அதிகமாகவே இரத்தம் சேமிக்கப்படுகிறது. இந்த முகாமை வருடாவருடம் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பு வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜெத்தா கிளையின் பொருப்பாளர் முஹம்மது முனாஃப் அரப் நியூஸ் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் ‘மன்னர் ஃபஹத் மருத்துவமனையோடு சேர்ந்து செப்டம்பர் 5 ந்தேதி இரத்த தான முகாம் நடத்தவுள்ளோம். இரண்டு மணியிலிருந்து ஆறு மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். 200க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் ரத்தத்தை ஹாஜிகளுக்காக தர இருக்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து இந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம். ‘ஒரு மனிதனை காப்பாற்றுவது ஒட்டு மொத்த மனித குலத்தையும் காப்பதற்கு சமம்’ என்ற குர்ஆன் வசனத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.’ என்று கூறினார்.

