Breaking
Fri. Dec 5th, 2025

ஏ.எச்.எம்.பூமுதீன்

மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் திட்டமிட்ட வெளியேற்றத்தையும் இனச்சுத்திகரிப்பையும் ஆதரிக்கின்றனர் என அ இ ம காங்கிரஸின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சித்தீக் நதீர் அவர்கள் ஊடகச்செய்திகளுக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவிப்பதாவது 30 வருட யுத்தத்தின்போது முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் தமிழர்கள்க்குமிடையில் உறவுப்பாலமாக செயற்பட்டு நாட்டின் நலனையும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் உணர்ந்து செயற்பட்டார்கள்.

அவ்வாறிருந்தும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பட்ட துன்பங்களுக்கு ஒப்பான இழப்புக்களையும் துன்பங்களையும் இன்றுவரை அனுபவித்து வருகின்றார்கள்.

ஒரு சில மணிநேரங்களுக்குள் பலவந்தமாக தமிழ் ஆயுதபாணிகளால் விரட்டியடிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவதை இன்று அதிகாரங்களிலுள்ள சிங்கள தமிழ் ஆட்சியாளர்கள் விரும்பாமல் இருப்பதற்கும் பொய்க்குற்றச்சாட்டுக்களால் இந்த மக்களின் குடியேற்றத்தை தடுப்பதற்குமான காரணம் இனச்சுத்திகரிப்பின் அடையாளங்களாகும்.

முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதை கண்டிக்காமலும் உரிய நடவடிக்கைகளை எடுக்காமலும் ஊடகங்ககளுக்கெதிராக குரல்கொடுக்காமலும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் சக்திகள் எவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த ஒத்துழைப்பார்கள்?

அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்கள் சொந்த மண்ணில் குடியேறுவதை தடுக்கின்றவர்களுக்கு ஒத்துழைக்கும் தமிழ்த்தலைமைகள் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற ஒற்றுமையை எவ்வாறு நிரூபிக்கப்போகின்றனர்?

ஒரே நாடு ஒரே மக்கள் , நாம் அனைவரும் இலங்கையர் என்ற தேசத்தை உருவாக்க நினைக்கும் அரசாங்கங்களின் இலட்சணங்கள் சொந்த மக்களை புற நாட்டவர்களைப் போன்று நடாத்துவதா?

நாடு பிரிவதை விரும்பாத ஒரே காரணத்துக்காக பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் சொந்த இடங்களில் 6 அடிக்கு மேல் காடு வளர்ந்துவிட்ட இடம் அரச சொத்து என்று கூறி அபகரிப்புச் செய்யும் சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

நாட்டுக்காக உயிர் உடைமைகளை இழந்த வடபுல முஸ்லிம்களுக்கு கருணைகாட்ட புத்தமகானின் போதனையின் வழியில் அன்பு காட்டவேண்டும் என்று கோரி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க கட்சிபேதங்கள் மறந்து ஒன்றுபடுவோம்!

Related Post