அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில்
அண்மைக் காலமாக IS பற்றியும் அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
ISIS என்று முன்னால் அறியப்பட்ட இவ்வியக்கம் ஈராக், சிரியா போன்ற நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சொல்லிவருகின்றது.
இப்பிரகடனம் இஸ்லாமிய விழுமியங்களுக்கு மாற்றமானது என்று உலக நாடுகளின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இயக்கங்களும் கருதுகின்றன. இவர்களின் தீவிரப் போக்கும், அத்துமீறிய கொடூறக் கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து வருகிறோம். இவ்விடயம் உண்மையாக இருந்தால் இவர்களின் இச்செயற்பாடு இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமானது என்பதை ஒரு சாதாரண முஸ்லிம் கூட அறிந்துகொள்ள முடியும்.
இவர்களின் உண்மைத் தன்மையும் கொள்கைகளும் தொடர்ந்தும் மயக்கமாகவே இருந்துவருகின்றன. இவர்களைப் பற்றிய செய்திகளை பொது ஊடகங்கள் மூலமாகவே அறிய முடிகின்றதே தவிர இவர்கள் பற்றி நேரடியாக, இவர்களது ஊடகங்களுக்கு ஊடாக உத்தியோகபூர்வமாக தெரிநதுகொள்ளும் வாய்ப்பு இல்லை என்றே கூறல் வேண்டும்.
வெளிப்படையாகப் பார்க்கின்ற பொழுது இஸ்லாத்திற்கு எதிரான சில தீய சக்திகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் இவர்களை இயற்றுகின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
இவர்களைப் பற்றி ஊடகங்களில் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஆரம்பக் கட்டத்திலேயே, இவர்களின் நிலைப்பாடுகளை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில், கடந்த றமழான் மாதத்தின் ஆரம்பப்பகுதியில், 06.07.2014 ஆந்தேதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷேக் எம். ஐ. எம் ரிழ்வி முப்தி அவர்கள் விமர்சித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போன்று, 23.08.2014 அன்று நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றக் குழுக் கூட்டத்திலும் IS பற்றி அறிக்கையொன்று வெளியிடப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், உலக நாட்டு இஸ்லாமிய அறிஞர்களும், அமைப்புகளும் இவர்கள் பற்றி தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வருகின்றமையும் இங்கு நினைவுபடுத்ததக்கதாகும்.
இந்தப் பின்னணியில், மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மையாக இருப்பின், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா IS என்ற இவ்வமைப்பையும், இவ்வமைப்பின் இஸ்லாத்துக்கு முரணான செயற்பாடுகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இஸ்லாம் அன்பு, கருணை, மனித நேயம், மனித உயிர்களை மதித்துப் பாதுகாத்தல் போன்ற உயர்ந்த பண்புகளை வலியுறுத்தும் மார்க்கம் என்பதை, இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் அனைத்து அமைப்புகளும் மனதிற்கொள்ளவேண்டும் என்றும் ஜம்இய்யா வேண்டிக்கொள்கிறது.
மேலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, IS விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும், இவர்கள் பற்றிய செய்திகளைப் பரிமாரிக்ககொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாழில்
செயலாளர் – ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா