Breaking
Sat. Apr 27th, 2024

உலகக் கோப்பையை போலவே ஐ.பி.எல். தொடரிலும் டி வில்லியர்ஸ் அதிரடியால் மிரட்ட தொடங்கி விட்டார். மும்பை அணிக்கு எதிராக அவர் அடித்த 133 ரன்கள்தான் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் தனிப்பட்ட வீரர் ஒருவரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இந்த தொடரில் மேலும் 3 ரன்கள் எடுத்தால் ஆரஞ்சு தொப்பி அவரிடம் வந்து விடும். ஆனால் தான் எப்போதும் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவதில்லை. அணிக்காகவே எனது பணி தொடர்கிறது என்கிறார் டி வில்லியர்ஸ். ஏம்பா அவன் மனுசனே இல்லப்பா..அப்டிங்கற வார்த்தைய இப்போ மீண்டும் கேட்க முடிகிறது. ஆனா உண்மையிலேயே இந்த தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் தன்னலமற்ற அற்புதமான கிரிக்கெட் வீரன்தான்…அதற்கான காரணங்களை அடுக்கினால் அசந்து போவீர்கள்…

கிரிக்கெட்டை பொறுத்த வரை பேட்ஸ்மேன்கள் லெக் சைட், அல்லது ஆஃப்சைடுகளில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்குவார்கள். சச்சின் போன்ற ஒரு சிலர்தான் இரண்டு பக்கங்களிலும் சிறந்து விளங்குவார்கள். சச்சினிடம் ரிவர்ஸ் ஸ்வீப் ஷார்ட்களை பார்ப்பது அரிது. ஆனால்  டி வில்லியர்ஸ் மைதானத்தின் அனைத்து பகுதிக்கும் பந்தை செலுத்தும் வல்லமை கொண்டவர்.படுத்து, புரண்டு, விழுந்து, உருண்டு எல்லாம் அடிப்பார்.அந்த வகையில் டி வில்லியர்சுக்கு அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் செல்லப்பெயர் மிஸ்டர்.360.

விளையாட்டு உலகை பொறுத்த வரை டி வில்லியர்ஸ் விளையாடாத விளையாட்டே கிடையாது. தென்ஆப்ரிக்க கால்பந்து அணி, ஹாக்கி அணிகளுக்கு அவரது பெயர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

தென்ஆப்ரிக்க ஜுனியர் ரக்பி அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

சிறந்த நீச்சல் வீரரான டி வில்லியர்ஸ் 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் ஜுனியர் பிரிவில் தேசிய அளவில் சாதனை படைத்தவர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் தென்ஆப்ரிக்க ஜுனியர் அணியில் இடம் பிடித்தவர்.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் தென்ஆப்ரிக்க தேசிய சாம்பியன்

விளையாட்டு மட்டுமல்ல படிப்பிலும் டி வில்லியர்ஸ் கெட்டிக்காரர்தான். தேசிய அளவிலான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்காக நெல்சன் மண்டேலாவிடம் விருதும் வாங்கியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 52.93 சதவீதம் சாராசரி வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 98.35 ஆகும். ஒருநாள் போட்டி வரலாற்றில் 50 சதவீதத்திற்கு மேல் சராசரியும் ஸ்டிரைக்ரேட் 95க்கு மேலும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ்தான்.

ஏற்கனவே விரைவான அரைசதம், சதமடித்து சாதித்துள்ள டி வில்லியர்ஸ் கடந்த ஜனவரி மாதம்தான் மேற்கிந்திய தீவுகள் அணியை புரட்டி புரட்டி எடுத்து 44 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் உலகக் கோப்பையில் மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 66 பந்துகளில் 162 ரன்கள் விரட்டி எடுத்துள்ளார்.தற்போது ஐ.பி.எல்லில் மும்பை அணிக்கு எதிராக 133 ரன்களை குவித்து மிரட்டியுள்ளார்.

இப்படி அதிரடியாக ஆடும் டி வில்லியர்ஸ் 220 பந்துகளில் 33 ரன்களை எடுத்த கதையும் உண்டு. எதற்காக தெரியுமா? தென்ஆப்ரிக்க அணியை தோல்வியில் இருந்து தப்புவிப்பதற்காகத்தான்.ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நடந்த கதை இது. அந்த வகையில் அணிக்காக ஆடும் மனிதர் டி வில்லியர்ஸ்.

குறைந்த பந்தில் சதமடிப்பதுதான் நம்ம ஏலியன்ஸ்சின் தனி பாணி.அதாவது சதமடிக்கும் போது அவரது ஸ்டிரைக் ரேட் 100க்கு மேல்தான் இருக்கும்.நேற்று ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிராக டி வில்லியர்சின் ஸ்டிரைக் ரேட் 238 ஆக இருந்தது. ஒரே ஒரு முறை நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில்தான் 106 பந்தில் 106 ரன்கள் எடுத்துள்ளார். இதுதான் அவரது குறைந்த ஸ்டிரைக் ரேட்…அதாவது 100. இப்போ சொல்லுங்க…டி வில்லியர்ஸ் மனிதரா?அல்லது ஏலியன்சா?

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *