Breaking
Fri. Apr 26th, 2024

ஜரோப்பிய யுனியனின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 30சவீதத்தினால் அதிகரிக்கும் அதே வேளை வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் 213சதவீதத்தினால் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கி வரும் டூனிசிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் நெஜ்மேடின் லக்ஹால் அவர்களை கைத்தொழில் வர்த்தக அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
டூனிசியாவினதும், இலங்கையினதும்; தனியார் துறைகள் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது. இரண்டு நாடுகளினதும் வர்த்தக உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாததனால், அந்த உறவை அதிகரிப்பதற்கான காலம் தற்போது கனிந்து வருகின்றது. இரண்டு நாடுகளுக்கும் முதலீடு மற்றும் வர்த்தகத் துறை தொடர்பான சவால்கள் இருக்கின்ற போதும் அவற்றையும் தாண்டி இந்தத் துறைகளில் வெற்றியடைய முயற்சிக்க வேண்டும். அத்துடன் டூனிசியா, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பங்காளராக மாற வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் இலங்கைக்கு கிடைத்த ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையின் மூலம் டூனிசிய முதலீட்டாளர்களும் இலாபமீட்ட முடியும.; டூனிசியா நாடு ஜரோப்பிய யூனியனுடன் மிக நெருக்கமான வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த நாட்டின் உற்பத்தியாளர்கள் தென்னாசியச் சந்தையில் தமது வர்த்தக முயற்சிகளை மேற்கொள்வதில்லை. எனவே இலங்கையும், டூனிசியாவும் இந்த பரஸ்பர வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்தக் குறைபாட்டை தீர்த்து வைக்கமுடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இலங்கையானது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாடுகளுக்கு சுமார் 8000 பொருட்களை தீர்வையற்ற முறையில் ஏற்றுமதி செய்ய முடிகின்றது.
எமது அரசாங்கம் சீனாவுடனும், சிங்கப்பூருடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஆகவே இலங்கையின் வர்த்தக சந்தையானது பிரமாண்டமான முறையில் அதிகரித்து இருப்பதுடன் இலங்கையுடனான வெளிநாட்டு நேரடி முதலீட்டு கோரிக்கையானது ஆச்சரியம் தரக்கூடியவகையில் அதிகரித்துள்ளது. எனவே உங்களின் டூனிசிய முதலீட்டாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க நானும் எனது அமைச்சும் தயாராக உள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் ஊக்கமடைவதற்கு வழியேற்படுவதுடன் வர்த்தக வளர்ச்சியை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
2016ம் ஆண்டு இலங்கை மற்றும் டூனிசியாவிற்குமிடையிலான வர்த்தகம் 2.13மில்லியன் டொலராக மிகக் குறைந்தளவிலேயே இருந்நது. எனினும் 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்காக அதிகரித்து இருந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், இலங்கையானது டூனிசியாவிற்கு கடந்த வருடம் தேயிலையையே பிரதானமாக ஏற்றுமதி செய்திருப்பதுடன் அந்த நாட்டிலிருந்து மின் ஆழிகள் மற்றும் மின்மாட்டிகளை இறக்குமதி செய்திருந்ததையும் நினைவுபடுத்தினார்.

ஊடகப்பிரிவு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *