Breaking
Mon. May 6th, 2024
– ஊடகப்பிரிவு
முஸ்லிம்கள் அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய காலகட்டம் இது.
 நமது சமூகம் ஐக்கியப்படுவதன் மூலமே நமக்கெதிரான சூழ்ச்சிகளையும், சதிகளையும் முறியடிக்கமுடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது ஈத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
 நல்லமல்களையும், பண்பாட்டுப் பயிற்சியையும் நமக்களித்த றமழான் நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்று விட்டது.  நாம் பூரிப்புடன் பெருநாளை கொண்டாடவுள்ளோம்.
 புனித றமழான் மாதம் இறைவன் நமக்களித்த அருட்கொடைகளில் ஒன்று. ஆண்டாண்டு தோறும் நமது விருந்தாளியாக வந்து செல்லும் றமழான் தந்த நன்மைகள் ஏராளம். மனிதன் மனிதனாக வாழ வேண்டும். புனிதனாகவும் வாழ வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பம். எனவே தான் புனித றமழானில் இறைவன் நமக்கு பண்பாட்டுப் பயிற்சிகளை வழங்கியுள்ளான்.
இந்த றமழான் ஆரம்பத்தில் நமது சமூகத்தின்  உணர்வுகளைத் தட்டியெழுப்பி அதனை உரசிப்பார்க்க ஒரு சிறிய இனவாதக்கூட்டம் பாரிய கொடூரங்களை நமக்கு ஏற்படுத்திய போதும் இஸ்லாம் கற்றுத் தந்த வழியில் அடக்கம், பொறுமை, சாந்தமானபோக்கு, சமாதானம் ஆகிய பண்புகளை கடைப்பிடித்து நாம் வாழ்ந்திருக்கினறோம்  என்ற மன திருப்தி இருக்கின்றது.
முஸ்லிம்களாகிய நாம் சகோதரத்துவத்துடன்  ஏனைய இனங்களுடன் ஒற்றுமையைப் பேணி இனநல்லுறவை வளர்த்து வாழவிரும்புகின்றோம் என்பதை இந்த றமழானில் நாம் உணர்த்தி இருப்பது போன்று தொடர்ந்தும் அதனை கடைப்பிடிப்பதன் மூலம் இனவாதிகளின் கொட்டத்தை அடக்கமுடியும் என்பதே எனது உறுதியான நம்பிக்கையாகும்.
இந்த றமழான் காலத்தில் நமது சகோதரர் பலரின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் இருக்கின்றன. அதே போன்று வெள்ளம் மண்சரிவுகளால் அனைத்து சமூகங்களினதும் இயல்பு வாழ்க்கை பெரிதும்  பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் தமது இயல்பு  நிலைக்கு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.
அத்துடன் முஸ்லிம் நாடுகளில் சியோனிஷ சக்திகளும் ஏகாதிபத்தியவாதிகளும் ஊடுருவி அந்நாடுகளுக்கிடையே பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளன.
இந்த நிலை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி, உலக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாடுகளுக்கிடையிலான பிரிவினை நீங்கி, சுமூக உறவுக்கு வழி ஏற்பட வேண்டும் எனவும் 30 வருடங்களாக அகதிகளாக வாழும்  வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வெற்றி பெற வேண்டும் எனவும்  இறைவனைப் பிரார்த்திப்போம்.
அனைவருக்கும் எனது ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்கள்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *