Breaking
Fri. May 3rd, 2024
-M.I.MUBARAK-
முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத செயற்பாடுகளுள் முஸ்லிம் பெண்கள் முக்கிய குறியாகவே இருந்து வருகின்றனர். அவர்களின் ஆடைகளை இழிவு படுத்துவது, அவர்களின் செயற்பாடுகளுள் குறைகளைக் காண்பது, ஒழுக்க ரீதியாக அவர்களைச் சிதைப்பதற்கு முற்படுவது போன்ற பல்வேறு வகையான சதித்திட்டங்கள் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் பேரினவாதிகள் முஸ்லிம் பெண்களை மிக மோசமாகச் சித்திரிக்கின்றனர்; ஏனைய இனங்களைச் சேர்ந்த பெண்களை விட முஸ்லிம் பெண்களே மோசமானவர்கள் என்ற பிரசாரங்கள் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேரினவாத சிந்தனை கொண்டவர்களும் அவர்களுள் சபலபுத் தியுடையவர்களும் பாலியல்ரீதியாக முஸ்லிம் பெண்கள்மீது தாக்குதல் நடத்திவருவதை சமூக வலைத்தளங்களில் தவழ்வோர் அறிந்துகொள்ள முடியும்.
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளும் அவர்களுக்கு இஸ்லாம் வழங்குகின்ற பாதுகாப்பு முறைமையும் அவர்களின் சுதந்திரத்தை முழுமையாகப் பறிக்கின்றன என்று பேரினவாதிகள் பிரசாரம் செய்கின்றனர்.
உறவினர்களுக்கும் தாம் சார்ந்த சமூகத்துக்கும் பயந்தே இப்பெண்கள் இந்த இஸ்லாமிய உத்தரவிற்குக் கட்டுப்படுகின்றனர் என்றும் அவர்கள் இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவருவதற்கே விரும்புகின்றனர் என்றும் பேரினவாதிகள் பிரசாரங்கள் செய்கின்றனர்.
குறிப்பாக, முஸ்லிம் பெண்களின் ஆடைகளே பேரினவாதிகளின் குறியாக இருக்கின்றன. அப்பெண்களை அடிமைப்படுத்தும் முதல் விடயமாக இந்த ஆடைகள் இருக்கின்றன என்று கூறும் இனவாதிகள், இந்த ஆடைகள் பெண்களை கெளரவப்படுத்து கின்றன – பெண்களின் மானத்தைக் காப்பாற்றுகின்றன – தீய ஆண்களிட மிருந்து பாதுகாப்பு வழங்குகின்றன என்பதை ஏற்க மறக்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இந்த ஆடைகளினாலேயே ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர் என்பதையும் ஏற்க மறுக்கின்றனர்
.
இந்த ஆடைகளுக்கு எதிராக நாட்டில் சிறுசிறு சம்பவங்கள் இடம் பெற்று வந்தபோதிலும், அவற்றுக்கு எதிரான நாடுதழுவிய பிரசாரங்க ளைத் தொடக்கிவைத்த பெருமை பொதுபலசேனாவையே சாரும்.
ஹலால் சான்றிதழுக்கு எதிராக பொதுபல சேனா முன்னெடுத்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கடந்த வருடம் உலமா சபை எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து அபாயாவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தது பொதுபல சேனா.
அவர்கள் எதிர்ப்பது முகத்தை முழுமையாக மறைக்கும் புர்காவைத்தான் என்றபோதிலும், அந்த புர்காவை அவர்கள் அபாயா என்று அழைத்ததால் பொதுபல சேனாவின் ஆதரவாளர்கள் அபாயாவுக்கு எதிரான செயற்பாடுகளில் இறங்கினர்.
அந்தக் காலப்பகுதியில் மாத்தறை மற்றும் வெலிகந்த உள்ளிட்ட இடங்களில் அபாயா அணிந்து சென்ற பெண்கள் தாக்கப்பட்டனர். வேறு சில இடங்களில் – பஸ்களில் அபாயா அணிந்து சென்ற பெண்கள் மோசமான வார்த்தைகளால் தூற்றப்பட்டனர்
.
இவ்வாறு தொடங்கப்பட்டவைதான் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு எதிரான தாக்குதல்கள். அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட முஸ்லிம் பெண்கள் செல்லும் அனைத்து இடங்களுக்கும் இந்தப் பிரசாரங்கள் போய்ச் சேர்ந்துள்ளன. பேரினவாத சிந்தனைகொண்டவர்கள் அந்தப் பிரசாரங்களுக்கு அடிமைப்பட்டும் போகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறான அபாயா எதிர்ப்புச் சம்பவமொன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் முஸ்லிம் பெண்கள் இனி அபாயாவைத் தவிர்த்து புடவையே அணிந்துவர வேண்டும் என்றொரு உத்தரவை அம்மாவட்ட அரச அதிபர் பிறப்பித்துள்ளார் என்று அங்கு பணிபுரியும் முஸ்லிம் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு சென்றபோதே அரச அதிபர் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார் என்று அப்பெண்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இது தொடர்பில் இம்ரான் மஹ்ரூப் அறிக்கையயான்றை விட்டதைத் தொடர்ந்து அவ்வாறான சம்ப வமொன்று இடம்பெறவில்லை என்று தம்பலகாமம் பிரதேச செயலாளர் மறுத்துள்ளார்.
பள்ளிவாசலுக்கு எதிரான போராட்டங்களும் சரி, அபாயாவுக்கு எதிரான போராட்டங்களும் சரி, இதுவரை காலமும் முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே சிறுபான்மையாக வாழும் இடங்களில்தான் இடம்பெற்றுவந்தன. ஆனால், இவை இப்போது முஸ்லிம் – தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்துக்கும் வந்துவிட்டன.
ஆனால், கிழக்கில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு தமிழரும் – முஸ்லிம்களும் இடம்கொடுக்கக்கூடாது. வடக்கு, கிழக்கில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே மோதலை உருவாக்குவதற்கான சதித்திட்டத்தில் பொதுபல சேனா ஈடுபட்டுக்கொண்டி ருக்கும் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சிறு சம்பவங்கள் இடம்பெற்றால்கூட அவற்றைப் பெரிதுபடுத்தி இரண்டு இனங்களையும் மோதவிட்டு தனது திட்டத்தை நிறைவேற்றிவிடும் இந்த பொதுபல சேனா.
அடுத்தவரின் சமயத்தை – கலாசாரத்தை மதித்து வாழக்கூடிய புரிந்துணர்வு எம் மத்தியில் ஏற்படுத்தப்படவேண்டும். கல்முனை மாநகர சபையில் பணிபுரியும் தமிழ்ச் சகோதரர் ஒருவரை அம்மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர் தாக்கியபோது தாக்கப்பட்ட தமிழ்ச் சகோதரருக்கு ஆதரவாக அம்மா நகர சபையின் முஸ்லிம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகளால் பேரனர்த்தம் நிகழ்த்தப்பட்டபோது தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். இவ்வாறானதொரு நிலைமை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் பேரினவாதிகள் எங்களைக் கூறுபோடும் சதித் திட்டத்தை முறியடிக்க முடியும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *