Breaking
Mon. Apr 29th, 2024

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர்,  அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அந்த முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்லவென்று மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் எம்.பி., ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பிரதேச செயலாளர் மரியதாசன் பரமதாஸனின் நெறிப்படுத்திலில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மற்றும் பல்வேறு திணைக்களங்களின்  உயர் அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது,

ஒரு பிரதேசத்திலோ ஓர் ஊரிலோ அபிவிருத்தி ஒன்றை செயற்படுத்த விழையும் போது அதற்கு நிதி பெறுவதென்பது இலகுவான காரியமல்ல. அதற்கு பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டும். அவ்வாறு நிதி கிடைத்தாலும்  அந்த நிதியை பயன்படுத்துவதில் வரைமுறைகளும், காலவரைகளும் இருக்கின்றன. ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது அந்த திட்டத்திற்காக பல படிமுறைகளை தாண்டி வந்தபின்னர், உரிய திட்டத்தை செயற்படுத்தும் போது அந்தப் பணத்தை இன்னுமொரு திட்டத்திற்காக எளிதில் பயன்படுத்தவும் முடியாது. அவ்வாறு இன்னுமொரு திட்டத்திற்கு அந்த நிதியைப் பயன்படுத்துமறு கோருவதற்கான தேவைப்பாடு இருந்தாலும் அதிலுள்ள கஷ்டங்களையும் நாம் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரிக்கு ‘பார்வையாளர் விளையாட்டு அரங்கு’ ஒன்று அமைத்து தரவேண்டுமென பாடசாலை நிர்வாகம் எழுத்துமூலக் கோரிக்கையொன்றை என்னிடம் விடுத்தனர். அந்தவகையில் அதற்கான சில முயற்சிகளை நான் மேற்கொண்டோம். விiளாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகரவிடம் இதற்கு உதவி கேட்டபோது, அவர் கையைவிரித்தார். அதன் பின்னர் மீள்குடியேற்ற விசேட செயலணியின் மூலம் இதனை மேற்கொள்வதற்கு திட்டமிட்டோம். இதற்கென ரூபா 5.2மில்லியன் ஒதுக்கப்பட்டு விளையாட்டு அரங்கை அமைப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளும் பூரணப்படுத்தப்பட்டு, அரங்கை அமைப்பதற்கான டென்டரை கோரும் நிலைக்கு அது வந்துள்ளது.

எருக்கலம்பிட்டிக்கு கடந்தவருடம் நாம் விஜயம் செய்த போது, அந்தப் பாடசாலை மைதானத்தில் அரங்குக்கான அடிக்கல்லையும் நாட்டினோம். பாடசாலையின் அதிபர், ஆசிரியர் குழாம் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி சபை, நலன் விரும்பிகள், ஊர்மக்கள், கலந்துகொண்ட கோலாகலமான நிகழ்வு அது. பாடசாலை சமூகத்தின் முக்கிய பிரமுகர்களும், நலன் விரும்பிகள் சிலரும், உத்தேசிக்கப்பட்ட பார்வையாளர் அரங்குக்கு எருக்கலம்பிட்டி மண்ணின் மைந்தனும், முன்னாள் அமைச்சருமான நூர்தின் மசூரின் பெயரை வைக்கவேண்டுமென்று விடுத்த சிறந்த ஆலோசனையையும் நாம் ஏற்றுக்கொண்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தினோம். எனது அறிவுக்கெட்டியவகையில் அந்தச் சந்தர்ப்பத்தில் பாடசாலை அதிபர், அபிவிருத்திச் சபையின் செயலாளர் (தற்போதும் அவரே இருக்கின்றார்) உட்பட என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருமே அரங்கு அமைக்கும் முயற்சியில் அப்போது ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தனர்.

இது இவ்வாறு இருக்க மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடமிருந்து அண்மையில் எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் சிலரும், ஊரின் நலன்விரும்பிகளும் குறிப்பிட்ட திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை , பாடசாலை சுற்றுமதிலை அமைப்பதற்கு பயன்படுத்தி தருமாறு கோரிக்கைவிடுப்பதாக அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். ஆனால், இவர்கள் யாருமே என்னிடம் சுற்றுமதில் அமைத்து தரவேண்டுமென முன்னர் கேட்கவில்லை என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

பாடசாலைக்கு மதில் பிரதானமானதே. அவர்களின் கோரிக்கையும் நியாயமாக இருந்தாலும், அரங்குக்கான முயற்சிகள் கைகூடி திட்டம் ஆரம்பிக்கும் நிலையில் இப்போது இவ்வாறான கோரிக்கையை விடுப்பதென்பது எனக்கு நியாயமாகப்படவில்லை. இந்தவிடயத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் தாங்களும் மூக்கைநுழைத்துக்கொண்டு அவசரப்பட்டு சில கருத்துக்களை கூறுவது அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு சாதகமாக அமையாது என்பதே எனது கருத்தாகும். இந்தவருடத்திற்குள் இந்த நிதியை பயன்படுத்தவேண்டியிருப்பதால் இந்தத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். மதில் அமைப்பதற்கான செலவுகள் எவ்வளவு என்பது எனக்கு தெரியாத போதும், எனது நிதியொதுக்கீட்டில் ரூபா 25லட்சத்தை நான் வழங்குகின்றேன். மீதிப்பணத்தை ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடு மற்றும் சில மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வோம். அந்தப் பணிகளையும் திருப்திகரமாக மேற்கொள்வதற்கு அனைவரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்குவோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மன்னார் பிரதேச மக்களின் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டன. பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பங்கேற்காத திணைக்கள அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதெனவும் அடுத்தடுத்த கூட்டங்களில் அவர்களை கலந்து கொள்ளச் செய்வதற்கான  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

 

 

 

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *