Breaking
Thu. May 9th, 2024
இஸ்லாத்தை தழுவும் மேற்கத்தியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் அதே சமயம் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவ காரணமான திருப்பங்களையும் அவர்களின் அப்போதைய மன ஓட்டத்தையும் அவர்கள் விவரிக்கும்போது அவர்கள் மட்டுமின்றி அதை கேட்கும், பார்க்கும், படிக்கும் நமக்கும் மட்டிலா மகிழ்ச்சி உண்டாகிறது. ஓர் அமெரிக்கர் இஸ்லாத்தைத் தழுவும்போது தனக்குண்டான அனுபவத்தை விவரிப்பதை – அதுவும் சுவைபட விவரிப்பதை காண்போமா!
ஜஃப்ரி லேங் எனும் அமெரிக்கர்
ஜெஃப்ரி லேங் அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய பலகளைக்கழகங்களில் ஒன்றான ”University of Kansaas” -ன் கணிதப் பேராசிரியராவார். இவர் Even Angels ask (வானவர்களும் கேட்கின்றார்கள்) எனும் தலைப்பில் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த நூலில் இடம்பெற்றுள்ள இதயத்தைத் தொடும் பகுதியான “எனது முதல் தொழுகை” யைத்தான் இங்கு நாம் காணப்போகிறோம். அவர் அனுபவித்த இறைநம்பிக்கையின் – ஈமானின் சுவையை அவரது வாசகங்களிலேயே நாம் உணர முடியும்.
இஸ்லாத்தை எனது வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்ட சில தினங்களுக்குள்ளாகவே இமாம் சாகிப் என்னிடம் ஒரு புத்தகத்தைத் தந்துவிட்டார். கையடக்கமான அழகிய நூல் அது. வழவழப்பான தாள்களில் வண்ண வண்ண அச்சுகளில் தேவையான இடங்களில் வரைபடங்களுடன் இருந்த தொழுகைப்பற்றிய கையேடு அது.
தொழுகையில் ஓத வேண்டிய இறைவசனங்களின் மொழிபெயர்ப்பும் அதில் இடம் பெற்றிருந்தது. எனது முஸ்லிம் மாணவர்கள் உள்ளம் நிறைய அன்புடன் சொன்னார்கள், “ரொம்பவும் ஸ்ட்ரெயின் பண்ணீக்காதீங்க சார்! கொஞ்சாம் கொஞ்சமாகப் படிக்கவும், பழகவும் செய்யுங்க”. எனக்கு சிரிப்பாக வந்தது. “இறைவனைத் துதிப்பதில் போய் அப்படியென்ன கஷ்டம் இருக்கப்போகிறது” என்று நினைத்தேன்.
அன்று இரவு ஹாஸ்டலுக்குத் திரும்பியதும் நான் தூங்கப் போகவில்லை. இன்றைக்கே ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்ற உறுதி எனக்குள் எழுந்தது. நண்பர்களின் ஆலோசனையை நான் பொருட்படுத்தவில்லை. என் இறைவனை – என்னைப் படைத்தவனை – எனக்கு வாழ்வளித்தவனை – அவன் காட்டிய வழியில் தொழவேண்டும் என்று மனம் பரபரத்தது. இனி மூச்சுள்ளவரை தொழுகையாளியாகவே திகழ வேண்டும் என்ற தணியாத ஆசையும் ஆர்வமும் பெருக்கெடுத்தது.
ஆர்வமும் உறுதியான எண்ணமும் மனதில் நிரப்ப மங்கலான வெளிச்சத்தில் எனது அறையில் அந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன். அது ஒரு புது அனுபவமாக இருந்தது. எனக்குள் இனம் புரியாத உணர்வுகள் பொங்கின. திரும்பத் திரும்ப சின்ன நூலான அதைப் புரட்டிப் புரட்டிப் படித்தேன்.
எனது பாடங்கள், எனது வகுப்புகள், மனைவி, மக்கள் எல்லாவற்றையும் மறந்தேன். அந்த புத்தகத்தில் ஆழ்ந்து போனேன். தொழுகையில் ஓத வேண்டிய அரபி வார்த்தைகளையும், குர்ஆன் வசனங்களையும் அப்படியே திரும்பத் திரும்பக் கூறி மனனம் செய்ய முயன்றேன். வசனங்கள், பிரார்த்தனைகளின் பொருளை நெஞ்சில் பதித்துக் கொண்டேன்.
கடைசியில், என்னால் தொழ முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வஔந்தது. என் உள்மனம் அப்படித்தான் சொன்னது. எனது வாழ்நாளின் முதல் தொழுகையை நிறைவேற்ற முடிவு செய்தேன். அப்போது நல்லிரவு ஆகிவிட்டிருந்தது. எனவே இஷா தொழுகையை நிறைவேற்ற தீர்மானித்தேன்.
குளியலறைக்கு விரைந்தேன். தொழுகை கையேட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டு அதைப்பார்த்துப் பார்த்து ‘உளூ’ செய்ய ஆரம்பித்தேன். புதிதாக ஒரு அயிட்டத்தை சமைக்க முனையும் மாணவியைப் போல புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து எல்லாவற்றையும் செய்தேன். ஒவ்வொன்றையும் நிதானமாக – மிக நிதானமாக கவனத்துடன் செய்தேன். உளூ நீர் முகத்தில் சொட்டச் சொட்ட அப்படியே அறைக்குத் திரும்பினேன். உளூச் செய்த பிறகு முகத்தைத் துண்டால் துடைக்காமல் இருப்பது விரும்பத்தக்கது என்று நான் படித்திருந்தேன்.
அறை நடுவே நின்றுகொண்டேன். கிப்லாவின் திசையைக் கவனித்து கிப்லா நோக்கி நின்று கொண்டேன். அறைக்கதவு மூடப்பட்டிருக்கிறதா என்று ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டேன். நீண்ட பெருமூச்சு விட்டேன். கைகளை விரித்து காதுவரை உயர்த்தினேன். காது நுனிவரை கையை உயர்த்தி மிகவும் நிம்மதியுடன் உறக்கக்கூறினேன், “அல்லாஹு அக்பர்” – இறைவன் மிகப்பெரியவன்.
யாரும் எனது குரலைக் கேட்டிருக்கமாட்டார்கள் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. அந்த நடுநிசியில் யார்தான் விழித்திருப்பார்கள்? “ஆ…!” திடீரென்று எனக்கொரு எண்ணம் பொறிதட்டியது. யாராவது மறைந்திருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்களோ…! ஜன்னல் கதவு மூடாதது என் நினைவுக்கு வந்தது. பக்கத்து அறைக்காரர் என்னை இந்த நிலையில் பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள்? நான் திரும்பினேன். ஜன்னல் வழியே எட்டிப்ப்பார்த்தேன். யாருமே இல்லை. கூடம் வெறிச்சோடியிருந்தது. ஜன்னல் கதவுகளை அழுத்தமாக மூடினேன். மீண்டும் அறை நடுவே வந்து நின்றுவிட்டேன். மீண்டும் இறைவனை தொழ ஆரம்பித்தேன். கைகளை உயர்த்தினேன். கட்டை விரல்களை காது நுனிவரை உயர்த்தி உரக்க சொன்னேன் “அல்லாஹு அக்பர்”.
பிறகு மிக சன்னமான குரலில் அல்குர்ஆனின் முதல் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தேன். பிறகு இன்னொரு சின்ன அத்தியாயத்தை ஓதினேன். அன்று இரவு அரபி எவராவது எனது உச்சரிப்பைக் கேட்டிருந்தால் அவருக்கு ஒன்றுமே புரிந்திருக்காது. என்றாலும் ஒவ்வொரு வார்த்தையை உச்சரிக்கும்போதும் நான் என்னை மறந்தேன்.
இறைவனின் வார்த்தைகள்…! அவனைத் தொழுவதற்காக அவற்றை உச்சரிக்கிறேன்…! அந்த நினைப்பே என்னைச் சிலிர்க்க வைத்தது. பிறகு ”அல்லாஹு அக்பர்” என்று கூறி குனிந்து முட்டிக்கால்களை உள்ளங்கைகளால் பற்றிக் கொண்டேன். இப்படி என் வாழ்வில் எப்போதுமே குனிந்தது கிடையாது. இனம்புரியாத உணர்வு உடல் முழுவதும் அலையலையாய் பரவியது. ஒருவித கவலையும் எனது மனதைக் கவ்வியது. ஆனால் அந்த நிலையில் யாரும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு நிம்மதியளித்தது. நான் குனிந்த நிலையிலேயே திரும்பத் திரும்பச் சொன்னேன். “ஸுப்ஹான ரப்பியல் அளீம்” – ”மகத்தான எனது இறைவன் தூய்மையானவன்”. பிறகு நிமிர்ந்து நேராக நின்றேன். “ஸமியல்லா ஹுலிமன் ஹமித” – ”தன்னைப் புகழ்வதை இறைவன் கேட்டுக்கொண்டான்.” பிறகு “ரப்பனா லகல் ஹம்து” – ”இறைவனே! புகழனைத்தும் உனக்கே!” என்று சொன்னேன்.
பிறகு ”அல்லாஹு அக்பர்” சொன்னதும் ஒரு விந்தையான சோதனையில் சிக்கிவிட்டேன். ஏதோ ஒன்று என் மனதை அழுத்தியது. நெஞ்சம் பாரமாக இருந்தது.
இப்போது இறைவன் முன்னால் நான் சிரம் தாழ்த்த வேண்டியிருந்தது. ஸஜ்தா செய்ய வேண்டியிருந்தது. நான் தரையைப் பார்த்தேன். எனது முகத்தை தரையில் பதிக்க வேண்டிய கட்டம் அது!
ஆனால், அதை செய்ய முடியாதே….! என்னால் அதனை எண்ணிப்பார்க்கவும் முடியாது. தரையில் எனது முகத்தை வைக்க முடியாது. தரையில் எனது முகம் தொடும் அவமானம் எனது வாழ்வில் எப்போதும் நிகழ்ந்தது கிடையாது. எஜமான் முன்பு சிரம் தாழ்த்தும் அடிமை நில எனக்கு வேண்டாம். இதை என்றுமே என்னால் செய்ய முடியாது. மனதில் பற்பல எண்ணங்கள் அலைமோதின.
எனது கால்கள் பாறைகளாகிவிட்டது. ஏதோ கீழே சிரம் தாழ்த்துவதிலிருந்து என்னைத் தடுப்பது போல கால்கள் இறுகிவிட்டன. வெட்கம் என்னைப் பிடுங்கித்தின்றது. அவமான உணர்வு நெஞ்சம் முழுவதும் வியாபித்திருந்தது. நண்பர்களின் சிரிப்பலைகள் எனது உள்ளத்தில் எடிரொலித்தது. மக்கள் என்னைப் பார்க்கிறார்கள். அடிமை போன்று விழுந்துகிடக்கும் நிலையைப் பார்த்து புருவங்களை உயர்த்துகிறார்கள். “பாவம், ஜஃப்!” என பரிதாபப் படுகிறார்கள். “ஸான் ஃபிரான்ஸிஸ்கோவில் இருந்து கொண்டு அரபாகி விட்டிருக்கிறான்” – இந்த ரீதியில் பற்பல எண்ணங்கள் என் மனதை வதைத்தெடுக்க என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
”உதவி! உதவி! என் இறைவனே! என்னைப் படைத்தவனே! இந்த எளியவனுக்கு உதவி செய், இறைவனே!” நான் திரும்பத் திரும்ப இறைவனிடம் மன்றாடினேன். உடலை ஒருங்கிணைத்து நின்றேன். மீண்டும் நீண்டதொரு பெருமூச்சு விட்டேன். பிறகு தரையில் விழுந்தேன். முதலில் கைகள், முட்டிக்காலகலி ஊன்றினேன். துளியூண்டு தயக்கம் மீண்டும் எட்டிப்பார்த்தது. கடைசியில்… முகத்தைத் தரையில் வைத்துவிட்டேன்.
மனதிலிருந்து களைந்துவிட்டு ஒருமுகப்பட்டு சொன்னேன், “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” – ”மேன்மையான எனது இறைவன் மிகவும் தூயவன்”. இன்று எப்படியும் தொழுகையை முழுமையாக நிறைவேற்றியே தீர்வது என்ற உறுகி எனக்குள் எழுந்தது. என்ன ஆனாலும் சரி.
”அல்லாஹு அக்பர்” என்று உரத்துச் சொல்லிக் கொண்டே மறுபடியும் எழுந்து நேராக நின்றேன். “இன்னும் மூன்று சுற்று பாக்கி இருக்கிறது” எனக்குள் சொல்லிக்கொண்டேன். தொழுகையின் மீதி ”ரக்அத்”துகளை அதே மனப் போராட்டத்துக்கிடையில் நிறைவேற்றினேன்.
எனது உணர்வுகளோடு, எனது அகந்தையோடு, ஈகோவுடன் நான் மோத வேண்டியிருந்தது. ஆனால், ஒவ்வொரு ”ரக்அத்” முடிந்ததும் நிலைமை லேசாகிக் கொண்டே போனது. கடைசி ”ரக்அத்”தை மிகவும் மன நிம்மதியுடன் நிறைவேற்றினேன்.
கடைசியில் தரையில் அமர்ந்து இறைவனின் புகழ்பாடும் தஷ்ஹூத் ஓதினேன். ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” – ”உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும், இறைவனின் அருட்கொடையும் நிலவட்டுமாக” என்று உரத்துக் கூறியவண்ணம் வலது பக்கமும் இடது பக்கமும் ஸலாம் சொன்னேன். தொழுகையை நிறைவு செய்தேன்.
பிறகு அதே நிலையில் அமர்ந்து எனக்குள் நிகழ்ந்த மனப்போராட்டங்களை அசை போட்டுக் கொண்டிருந்தேன். தொழுகையை நிறைவேற்றுவதில் இந்தளவுக்கு தயக்கமும் போராட்டமுமா? மிகவும் வருந்தினேன். இறைவனிடம் மன்றாடினேன். “என் இரைவனே! என்னைப்படைத்தவனே! என் அலட்சியம், எனது முட்டாள்தனம் மற்றும் அறியாமைக்காக என்னை மன்னித்தருள்வாயாக! நான் வெகுதூரத்திலிருந்து வந்திருக்கிறேன். என்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது!”
அதே கணம் –
திடீரென்று ஒரு அற்புத சுகத்தை உணர்ந்தேன். இதற்கு முன்னால் அப்படிப்பட்ட அலாதியான சுகத்தை நானுணர்ந்தது கிடையாது. அது மிகவும் விந்தையான அனுபவம். மனம் லேசாகிவிட்டது. ஒருவித குளிமை இதயத்தை நிறைத்தது. அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பெரும்பனி ஊற்று ஒன்று என் உள்ளத்தின் ஒரு பகுதியிலிருந்து பொங்கிப் பெருகி வருவதைப் போன்ற உணர்வு. அதில் எனது கவலைகள், ஐயங்கள், சஞ்சலங்கள், சகடுகள் எல்லாமே கரைந்து போயின. சொல்லவியலாத உணர்வு ஒன்றால் நான் ஆட்கொள்ளப்பட்டேன். வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன். எனது உடல் நடுங்கியது. அது வெறுமனே உடல் ரீதியான உணர்வுகளாக இருக்கவில்லை. இறைவனின் பேரருள் என்னுள் புகுவதாகவும் எனக்கு நிம்மதி அளிப்பதாகவும் உணர்ந்தேன்.
பிறகு நான் அழ ஆரம்பித்துவிட்டேன். கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களை நனைத்தது. அழுகைக்கு என்ன காரணம்? என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால், கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. விம்மி விம்மி அழுதேன். எந்தளவுக்கு அதிகமாக அழுகிறேனோ அந்தளவுக்கு மகத்தான கருணையின் அரவணைப்பில் தஞ்சம் புகுவதாக உணர்ந்தேன்.
அந்த கண்ணீர்த்துளிகள் குற்ற உணர்வு மிகைத்ததால் துளிர்த்தவை அல்ல. வெட்கத்தினாலோ, பெருமகிழ்ச்சியாலோ, பேருவகையலோ வந்தவை அல்ல. (இத்தனைக்கும் இந்த உணர்வுகள் எனக்குள் மிகைத்தோங்க எல்லாக் காரணிகளும் இருந்தன). ஆனால், எனது அழுகைக்கான காரணமாக அந்த உணர்வுகளை என்னால் சுட்ட முடியாது. எனக்குள் ஒரு அணை பிளந்து சிதறுவதாகவும் அதில் தேக்கி வைத்திருந்த பயம், கோபம், கர்வம் போன்ற உணர்வுக் கழிவுகள் மிக வேகமாக வெளியேருவதாகவும் நான் உணர்ந்தேன்.
வெகுநேரம் அதே நிலையில் அமர்ந்திருந்தேன். எனது கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தேன். விசும்பல்களும் விக்கல்களும் தொடர்ந்தன. எனது அழுகை நின்றுபோனபோது நான் மிகவும் களைத்துப் போயிருந்தேன். இந்த அனுபவம் மிகவும் விந்தையானதாக வியப்புக்குறியதாக இருந்தது. அறிவுப்பூர்வமாக அதனை விளக்குவது கடினமே. ஒன்று மட்டும் எனக்குத் தெளிவாக விளங்கியது. எனக்கு இறைவனும் தொழுகையும் மிக மிக அவசியமாகத் தேவை.
எழுதுவதற்கு முன்பு கடைசியாக கருணையாளனிடம் மன்றாடினேன். “மகத்தான இறைவனே! என் அதிபதியே! மீண்டும் நாத்திகப் பாதையில் நான் செல்ல முனைந்தால் என்னை அழித்துவிடு! மகத்தானவனே! நிகரில்லா அன்புடையோனே! நிகரில்லா அன்புடையோனே! அந்தக் கணமே எனக்கு மரணத்தைத் தந்துவிடு. குறைபாடுகளுடனும், பலவீனங்களுடனும் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், உன்னை நிராகரித்த நிலையில் ஒரு நாளும் என்னால் உயிர்வாழ முடியாது.”

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *