Breaking
Tue. Apr 30th, 2024

செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவின் அதிபர் ரௌல் காஸ்ட்ரோவுடன் சுமார் 1 மணித்தியால நேரமாகத் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கா கியூபா இடையே வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் எட்டப் பட்டதுடன் இதன் ஒரு பகுதியாக 2009 ஆம் ஆண்டு முதல் தான் சிறைப் பிடித்து வைத்திருந்த அமெரிக்க ஒப்பந்ததாரரான அலன் கிரொஸ் என்பவரை இன்று புதன்கிழமை கியூபா விடுவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று நடந்த உரையாடல் 1953 கியூபப் புரட்சிக்குப் பின்னர் கியூப அமெரிக்க அதிபர்களுக்கு இடையே நிகழ்த்தப் பட்ட முதலாவது தொலைபேசி உரையாடல் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஒபாமா இவ்விடயம் தொடர்பாக அறிவிக்கையில், குறித்த ஒப்பந்தம் மூலம் இரு நாட்டுக்கும் இடையே போக்குவரத்து மற்றும் பொருளாதார நெருக்கடிகள் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் இரு நாடுகளும் தத்தமது தூதரகங்களை தமது நாடுகளில் மீளத் திறக்க சம்மதித்திருப்பதுடன் எதிர் வரும் வாரங்களில் இராஜ தந்திர உறவுகளை சீரமைக்கும் பணி தொடர்பான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது என்றும் வெள்ளை மாளிகையின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

2013 ஜூன் முதல் அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே கனேடிய அரசு மற்றும் வத்திக்கான் மத்தியஸ்தம் வகித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. பாப்பரசர் ஃபிரான்சிஸ் கடிதம் மூலம் அதிபர் ஒபாமாவை இவ்விடயத்தில் ஊக்குவித்திருந்தார். இதேவேளை சமீபத்திய ஒப்பந்தத்தின் பின்னர் அதிபர் ஒபாமா மேலும் கூறுகையில், கியூபாவுடனான உறவில் சுமார் 5 தசாப்தங்களுக்கு மேலாக நாம் கடைப்பிடித்த அதே பாணியே உதவி செய்யும் என்பதைத் தான் நம்பவில்லை என்றும் அரசுடன் உறவு வலுப் படுத்தப் படவுள்ள நிலையிலும் கியூப மக்களுக்குத் தேவையான அனைத்து சுதந்திரங்களையும் அளிப்பது தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *