Breaking
Mon. May 13th, 2024

“கூட்டுறவே நாட்டுயர்வு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது ஆன்றோர் வாக்கு.  அந்த வகையில் வவுனியாவில் தையல் பயிற்சி  பெற்ற 40 யுவதிகள் ஒன்று சேர்ந்து ஒரு சிறிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கைத்தொழில்,வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் நிறுவகத்தினால் (SLITA) அமைச்சர் றிசாத் பதியுதீனின்  வழிகாட்டலில், சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் யுவதிகளுக்கு தையல் பயிற்சிகளை வழங்கி பின்னர் சான்றிதழ்களும், தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் இந்த யுவதிகள் சுயமாக தொழில் செய்து, தமது குடும்ப வருவாயை பெற்றுக்கொள்வதற்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பத்து இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு அமைச்சர் றிசாத்தின் இந்த தூரதிருஷ்டியான முயற்சி பங்களிப்பையும் நல்கி வருகின்றது. இவ்வாறு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த தையல் பயிற்சித் திட்டத்தின் பிரதிபலனை வவுனியாவில் நாம் காணமுடிகின்றது.

வவுனியா மாவட்ட யுவதிகளுக்கு தையல் பயிற்சியின் பின்னர் வழங்கப்பட்ட தையல் இயந்திரங்களை அவர்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லாமல், தங்களுக்குள் ஒன்றுகூடி ஒரு மினி ஆடைத் தொழிற்சாலையை குருமண்காட்டில் தொடங்கி நடாத்தி வருகின்றனர். மிகவும் வெற்றிகரமாக இயங்கிவரும் இந்த நிலையத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்குத் தேவையான மேலதிக வசதிகள் குறித்தும் கலந்துரையாடினார். இந்த தொழிற்சாலையில் சிறுவர், பெண்களுக்கான விதம் விதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முயற்சியில் தாங்கள் இலாபமீட்டுவதாகவும், தனித்தனியாக இயங்கினால் இவ்வாறான நன்மைகளைப்  பெறமுடியதெனவும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

அமைச்சருடனான இந்த விஜயத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி மில்ஹான், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத், இணைப்பாளர் பாரி மற்றும் ஜிப்ரியா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *