Breaking
Mon. Apr 29th, 2024
  • சுஐப் எம் காசிம்

முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிவில் அமைப்புக்கள் பல, சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும் வேறு சில சிவில் அமைப்புக்கள் அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தாக்குவதையும், விமர்சிப்பதையுமே தனது முழு நேரத் தொழிலாகக் கொண்டியங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நவமணிப் பத்திரிகையும், ஜம் இய்யதுஷ் ஷபா நிறுவனமும் இணைந்து நடத்திய ரமழான் பரிசு மழைப் போட்டியின் பரிசளிப்பு விழா மருதானை ஜம் இய்யதுஷ்ஷபா மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

ஜம்இய்யது ஷபாபின் பிரதிப் பணிப்பாளர் மௌலவி எம் எச் எம் தாசிம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாக இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஷைட் அல் ஹுஸைன், மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் அஸ்வர், தொழிலதிபர் டி எல் எம் இம்தியாஸ், ஜம் இய்யது ஷபாப் நிறுவன பணிப்பாளர் மௌலவி ரஷீத் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர்.

நவமணிப் பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம் டி எம் ரிஸ்வி அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை மௌலவி தாஸிமும்,  விஷேட உரையை நவமணிப் பிரதம ஆசிரியர் என் எம் அமீனும் நிகழ்த்தினர்.

மௌலவி அல் ஹாபிஸ் அப்துல் ஹபீசின் கிராத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வின் அனுசரணையாளராக மௌலான ட்ரிவல்ஸ் நிறுவனமும், அமனா தகாபுல் நிறுவனமும் பங்கேற்றிருந்தன.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றிய போது கூறியதாவது,

முஸ்லிம் சமூகத்திற்கு தற்போது பல்வேறு வழிகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும், பிரச்சினைகளையும் எண்ணிப்பார்க்கும் போது சமூகத்திற்கான ஓர் காத்திரமான ஊடகம் அவசியமானதென்ற கடந்த காலத்தில் எழுந்த கோரிக்கைகளும், குரல்களும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்களுக்கு தனியான ஊடகம் தேவையென்று கடந்த காலங்களில் நமது சமூகத்தின் பல்வேறு முனைகளிலும் குரல்கள் ஓங்கி ஒலித்த போதும் இன்னுமே நமக்கென சிறந்த ஊடகமொன்று இல்லாத ஓர் குறையை நாம் உணர்ந்து வேதனைப்படுகின்றோம்.

உதாரணமாக மறிச்சுக்கட்டிப் பிரதேசத்தில் 38 நாட்கள் தமது பூர்வீகக் காணிகளை இழந்து வீதிகளிலே போராட்டம் நடத்தி வரும் அந்த மக்களின் பிரச்சினையை இன்னும் தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளாத நிலையே இருக்கின்றது. இது வேதனையானது.

நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களிலும் நமது சமூகத்தின் திறமையான ஊடகவியலாளர்கள் பணியாற்றி வருகின்ற போதும் அவர்கள் உள்ளதை உள்ளபடி எழுத முடியாது கட்டுண்டு கிடக்கின்றனர். எமது பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் இத்தனை சிக்கல்கள் நமக்கிருக்கின்றன.

நமது சமூகத்தில் அனர்த்தங்கள் ஏற்படும்போது அனைத்து சாராரும் ஒன்றுபட்டு முடிந்தளவு உதவுகின்ற நிலை உள்ள போதும் முறையான செயற்திட்டங்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. அடுத்த அனர்த்தம் வரும் வரை நாங்கள் சமூகத்தின் எதிர்காலம் பற்றியோ, எதிர்கொள்ளும் பிரச்சினை பற்றியோ முற்கூட்டி சிந்திப்பதில்லை.

பிரிந்து கிடந்த உலமாக்களும், கருத்து முரண்பாடு கொண்டுள்ள ஊடகவியலாளர்களும், முரண்பாடான சிவில் அமைப்புக்களும் தங்களளவில் ஒன்று பட்டு தனித்தனி பயணங்களை மேற்கொண்டு வருகின்ற போதும் அனைத்து சமூகம் சார்ந்த சக்திகளும் ஒன்றுபட்டு ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். அந்த வகையில் பணம் படைத்த, நல்ல மனம் படைத்த செல்வந்தர்களும் முஸ்லிம் சமூகத்திற்கு முன்வந்து உதவ வேண்டும். குறிப்பாக ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவது போல முஸ்லிம்களுக்கென பலம் வாய்ந்த ஊடகமொன்றை கட்டியெழுப்ப வேண்டிய தார்மீகப் பொறுப்பு இவர்களுக்கிருக்கின்றது.

ஊடகத்துறையில் நமது சமூக வெற்றியே ஏனைய சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து தீர்வை பெற்றுக் கொள்ள உதவும்.

நவமணிப் பத்திரிகையானது கடந்த 21 வருடங்களுக்கு மேலாக பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் கரடு முரடான பாதைகளைக் கடந்து முஸ்லிம் சமூகத்திற்கு பங்களிப்பாற்றி வருகின்றது. அதே போன்று விடிவெள்ளிப் பத்திரிகையும் சமூகத்திற்கு பணியாற்றி வருகின்றது. இந்த வகையில் ஆங்கில சிங்கள வார இதழ் பத்திரிகை ஒன்றின் அவசியமும் உணரப்படுகின்றது.

நமது பிரச்சினைகளை அரசியல் தலைவர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், உணர்த்துவதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் சிங்கள, ஆங்கிலப் பத்திகைகளை வெளியிட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் வட மாகாணத்தில் வெளியேற்றப்பட்டு மீண்டும் குடியேறியுள்ள மக்களுக்கு வீடமைக்க, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவிய பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இங்கு சமூகம் தந்துள்ள இலங்கைக்கான தூதுவர் மேஜர் ஜெனரல் ஷைட் அல் ஹுஸைன்,  மேமன் சமூகம், முஸ்லிம் சமூக பரோபகாரிகள், மற்றும் அரபுநாடுகளின் தனவந்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரும் உரையாற்றினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *