Breaking
Mon. May 20th, 2024

வடகொழும்பு, மத்திய கொழும்பு தொகுதிகள் உள்வரும் கொழும்பு பிரதேச பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி சபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை மற்றும் மாவட்ட செயலகம் ஆகிய அரச அமைப்புகளுக்கு சொந்தமான மற்றும் பயன்படுத்தபடாத தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும்படி கொழும்பு பிரதேச செயலக பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரத்தில் வாடகை வீடுகளில் வசிக்கும் மத்திய தர மற்றும் குறைந்த வருமான பிரிவு மக்களின் மக்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று தரும் நோக்கில் பாரிய வீடமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் துறையினர் தயாராக இருப்பதால், உரிய காணிகளை அடையாளம் காண வேண்டிய தேவையை தானும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் உணர்ந்து இருப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறினார்.

கொழும்பு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கொழும்பு கோட்டை பிரிஸ்டல் வீதி கலாநிதி அஞ்சலோ மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

‘வட கொழும்பிலும், மத்திய கொழும்பிலும் வாழும் மத்திய தர மற்றும் குறைந்த வருமான பிரிவு மக்களின் வீடமைப்பு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் கடப்பாட்டை நமது அரசாங்கம் உணர்ந்துள்ளது. வாடகை வீடுகளில் வாழுகின்ற மக்களை வாழ்நாள் முழுக்க வாடகை செலுத்திக்கொண்டே, மாறி, மாறி வீடுகளை தேடி  அலைந்து திரிய விட அப்படியே முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். எனது அமைச்சில் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட பிரிவில் வீட்டு தேவை கொண்டோரின் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

அதேவேளை, குறைந்த மற்றும் மத்திய தர வருமானம் கொண்ட பிரிவினரின் பொருளாதார இயலுமைகளுக்கு பொருந்தி வரும் விதத்தில், புதிய வீடமைப்பு திட்டங்களை அமைக்கவும், அவற்றில் முதலீடு செய்யவும் அரச மற்றும் தனியார் நிதி வாய்ப்புகள் இப்போது ஏற்பட்டு உள்ளன. எனவே, உரிய காணிகளை அடையாளம் காண  வேண்டிய பணியை இப்போது ஆரம்பித்துள்ளோம்.

இதே நிலைப்பாட்டில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இருக்கின்றார். இந்த விவகாரத்தில் இணைந்து செயற்பட நாம் இருவரும் முடிவு செய்து, காணிகளுக்கு உரிமையுள்ள அரச நிறுவன அதிகாரிகளை அழைப்பித்து விபரங்களை திரட்டும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்’ என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *