Breaking
Fri. May 17th, 2024

எவ்வித காரணமும் இன்றி அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். தாக்குதல்களால் சேதமடைந்த பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள், உடமைகளுக்கான நஷ்டஈடுகளை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அவசர காலச்சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படுகிறது. நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள், இச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் பட்டுக்கொண்ட வேதனையை நாம் கண்டவர்கள். இந்தச் சட்டத்தின் மூலம் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. சாதாரண மக்கள் இச்சடத்தின் மூலமாக கைதுசெய்யப்படும் வேலைத்திட்டமும், தொலைக்காட்சிகளின் ஊடாக, சமூக வலைத்தளங்களின் ஊடாக ஒரு சமூகத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. நடந்து முடிந்த கலவரங்கள், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக திட்டமிட்டு பேசப்பட்டு அல்லது அதனுடன் சேர்ந்த அரசியல் தலைவர்களை மையப்படுத்தி அல்லது ரிஷாட் பதியுதீன் என்ற ஒருவரை மையப்படுத்தி நாட்டில் பாரிய கபளீகரத்தை ஏற்படுத்திய எதிர்க்கட்சியினர் இச்சட்டத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டும்.

ரிஷாட் பதியுதீன் என்பவர் பயங்கரவாதி என்று கூறுகின்றார்கள். அவருக்கு சஹ்ரான், இப்ராஹிம் ஆகியோருடன் தொடர்பு இருந்தது, சதோச வாகனம் பயங்கரவாதத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்கள். நேற்றையதினம் இராணுவத் தளபதியும் ரிஷாட் பதியுதீன் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லையெனக் கூறினார்.

அமைச்சர் கடந்த காலத்தில் எந்தவித பிழையான வழிகாட்டலையும் செய்யவில்லை, தேவையற்ற விடத்தில் இடையூறுவிளைவிக்கவில்லை என்று அமைச்சின் செயலாளர் கூறியதிலிருந்து ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் வெட்கித் தலைகுனிந்து வேதனையுடன் இருக்க வேண்டும். இவை எல்லாம் எதற்காகச் செய்யப்பட்டது என்றால், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரசியல் நோக்கத்துக்காகச் செய்யப்பட்டவையாகும்.

வரவிருக்கும் தேர்தலில் தாங்கள் ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்பதற்காக, சிறுபான்மை மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதாக அமிலப் பரிசோதனையாகும். மூன்று சிறுபான்மையினத்தையும் இதற்குள் தள்ளி இவர்கள் குளிர்காயப் பார்க்கின்றனர். அரசாங்கம் எந்தவிடயத்தையும் மூடிமறைக்கக் கூடாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கூறியுள்ளார். சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். தெரிவுக்குழு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி கூறுவதைப் போன்று அவருடைய தனிப்பட்ட தேவைக்கா அல்லது அரசியல் தேவைக்காக இது நிறுத்தப்படக் கூடாது. தொடர்ந்தேர்ச்சியாக தெரிவுக்குழு நத்தப்பட வேண்டும்.

2839 முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 100ற்கும் மேற்பட்டவர்கள் தடுப்புக் காவலில் உள்ளனர். 300ற் உட்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான என்ன குற்றம் என்று பார்த்தால் வீடுகளிலிருந்த கத்தி, பழையவாள்கள், சஹ்ரானின் படத்தை கையடக்கத்தொலைபேசியில் வைத்திருந்தமை, குர்ஆனை வைத்திருந்தமை போன்றவை காணப்படுகின்றன. அவை அநியாயமான கைதுகளாகும். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். முஸ்லிம்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை சமூகத்தினர் சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பு கிடையாது. முஸ்லிம்களே அவர்களை காட்டிக்கொடுத்திருந்தார்கள்.

சஹ்ரானின் பயங்கரவாதத்துக்கு முஸ்லிம்கள் எப்போதும் விரும்பியிருக்கவில்லை. அரசியல் இலாபத்தைப் பெறுவதற்கும், 52 நாட்கள் காலப் பகுதியில் தமக்கு விரும்பிய ஆட்சியை அமைக்க முடியாது போனமையால் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். விமல் வீரவன்ச எம்பி, ரிஷாட் பதியுதீன் பயணித்த சதோச வாகனங்கள் எனக் கூறியிருந்தார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அமைச்சின் செயலாளர் முன்வைத்த சாட்சியங்களின் மூலம் பொய்யானவை என்பது புலனாகியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தவர்கள் அனைவரும் அடிப்படைவாதிகள் எனக் காண்பித்து அரசியல் இலாபம் தேடுவதற்கு எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். தற்பொழுது நிலைமைகளே வேறு பக்கத்துக்குத் திருப்பப் பார்க்கின்றனர். சிலர் வில்பத்துக்குச் சென்று எதனையோ தேடிவருகின்றனர். ஷமபோஷ திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேருக்கு நாளொன்று இலவச உணவு வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட உணவில் கருத்தடை மாத்திரம் கலக்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் வேலைக்குச் சென்று திரும்பும் இலங்கையர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டாமா என்று கேட்க விரும்புகின்றேன். பள்ளிகளைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். மதரசாக்கள், கடைகள் என்பவற்றை தாக்குதல் நடத்தினர். இதற்கான நஷ்ட ஈட்டை அரசாங்கத்தின் பணத்திலேயே வழங்கவேண்டியுள்ளது. எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். சேதமாக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழக்கப்பட வேண்டும்.

கைதுசெய்யப்பட்டுள்ள ஷாபி மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இவர் எதிலும் தொடர்புபட்டிருக்கவில்லையென நாம் கூறியிருந்தோம்.

Related Post