Breaking
Thu. May 9th, 2024

வெள்ளிக்கிழமை 2014 YB35 என்று பெயரிடப் பட்ட ஓரளவு பெரிய குறுங்கோள் (asteroid) ஒன்று பூமிக்கு அண்மையில் அதாவது பூமியில் இருந்து 2.8 மில்லியன் தொலைவில் கடந்து செல்வதாகவும் இது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தை விட 11.7 மடங்கு அதிக தூரத்திலே தான் கடந்து செல்வதால் இது பூமியுடன் மோதாது எனவும் இதனால் ஆபத்தில்லை எனவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.

அரிஷோனா பல்கலைக் கழகத்தின் கட்டெலினா வான் ஆய்வுப் பிரிவால் கண்டு பிடிக்கப் பட்ட இந்த குறுங்கோளை ஓரளவு அபாயகரமான விண்பொருள் (PHA)என நாசா வகைப் படுத்தியுள்ளது. மேலும் இக்குறுங்கோள் 500 மீட்டர் அகலம் உடையதுடன் 23 000 mph வேகத்தில் பயணம் செய்து கொண்டு வருகின்றது. இந்த குறுங்கோள் பூமியுடன் மோதும் பட்சத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் அல்லது சுனாமி போன்ற இயற்கை அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடிய வல்லமை உடையது எனக் கணிக்கப் பட்டுள்ள போதும் இதனால் மக்கள் கலக்கம் கொள்ளத் தேவையில்லை.  ஏனெனில் இது பூமியுடன் மோதாது எனவும் நாசா அறிவித்துள்ளது. ஆனால் நாசாவில் பணியாற்றும் வானியல் வல்லுனர்கள் எமது பூமியைக் எந்த நேரத்திலும் கடந்து செல்லக் கூடிய ஆபத்தான விண் பொருட்கள் விண்ணில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது தொடர்பில் நாம் தீவிரமான அவதானத்துடன் இருக்க வேண்டிய தேவையை எமக்கு இந்த 2014 YB35 விண்கல் அறிவுறுத்துகின்றது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பூமிக்கு அண்மையில் 140 மீட்டரை விட அதிக விட்டமுடைய அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடிய விண்பொருட்கள் சுமார் 25 000 வரை கடந்து செல்வதாகவும் ஆனால் இவை பொதுவாக பூமியுடன் மோதுவதில்லை என்றும் கூறப்படுகின்றது. எனினும் ஒரு கிலோமீட்டரை விட அதிக விட்டமுடைய விண்பொருட்கள் (குறுங்கோள் அல்லது விண்கல்) சுமார் 1000 வரை பூமிக்கு அண்மையில் இருப்பதாகவும் இவற்றின் சுற்று வட்டப் பாதை குறித்து எப்போதும் கண்காணிப்பு மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் கூட அறிவுறுத்தப் படுகின்றது. நாசாவின் பூமிக்கு அண்மை பொருட்கள் (NEO) என்ற செயற்திட்டத்தின் கூற்றுப் படி ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒரு முறை தான் எமது பூமியை ஒரு உதைபந்தாட்ட மைதானம் அளவுடைய குறுங்கோள்கள் தாக்கி வருவதாகவும் டைனோசர்கள் போன்ற உயிரினங்கள் அழியக் காரணமாக இருந்த அதாவது ஒரு உயிரின நாகரிகத்தையே பூண்டோடு அழிக்கும் சக்தி வாய்ந்த குறுங்கோள்கள் நமது பூமியை ஒவ்வொரு மில்லியன் வருடங்களுக்கும் ஒரு முறை தான் தாக்கி வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

அண்மையில் அதாவது 2013 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யாவின் செலையாபின்ஸ்க் நகருக்கு அண்மையில் ஓர் விண்கல் வந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட அதிர்வலைகளால் நூற்றுக் கணக்கான மக்கள் காயம் அடைந்திருந்தனர். மேலும் இந்த விண்கல் தாக்குதல் கடந்த ஓர் நூற்றாண்டு காலத்தில் பதியப் பட்ட மிகப் பெரிய விண்கல் தாக்குதலாகப் பதியப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *