Breaking
Tue. May 7th, 2024
இலங்கையில் நடைபெறும் இறுதி ஜனாதிபதி தேர்தல் இதுவாகவே இருக்க வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்து்ளளார்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் போட்டி நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் செய்திகள் கசிந்துள்ளன.
இந்தநிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணான வகையில் இடம்பெறும் ஆட்சியினை முடிவிற்கு கொண்டுவர வேண்டும். அரசாங்கம் ஆட்சியமைத்த போது பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி தான்தோன்றித்தனமான ஆட்சியினை மேற்கொண்டு வருகின்றது.
எனவே, அதனை தடுக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அனைவரும் இவ்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேபோல் இலங்கையில் நடைபெறும் இறுதி ஜனாதிபதி தேர்தலாக தற்போது நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலே அமைய வேண்டும்.
அதனை ஏற்றுக்கொண்டு ஆறு மாத காலத்தினுள் ஜனாதிபதி முறையினை மாற்றி அனைத்து அதிகாரங்களையும் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்க தயார் எனின் ரணில் விக்கிரமசிங்க அந்த வாக்குறுதிகளை எமக்கு வழங்கினால் நாம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தயார்.
இந்த ஆட்சியினை மாற்றியமைக்க பலமான பொது எதிரணியொன்று உருவாக வேண்டும்.
ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளின் துணை மிகவும் அவசியமானது. ஆகவே, இம்மூன்று கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என்றால் அடுத்த அரசாங்கம் இலகுவில் உருவாகும்.
மேலும், தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியமானது. சிறுபான்மை மக்களின் ஆதரவு முழுமையாக இருக்குமாயின் அதுவே இவர்களுக்கு கிடைக்கும் முதல் வெற்றியாகும்.
அதற்காகவேனும் தமிழ் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளை தன்வசப்படுத்திக்கொள்ள பிரதான எதிர்க்கூட்டணி முயற்சிக்க வேண்டும்.
எனவே, நாட்டின் ஜனநாயகத்தினை நிலைநாட்டி அதிகாரப்பகிர்வு நோக்கிய பொது எதிரணி உருவாகுமாயின் சகல எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அதேபோல் ஆட்சியமைத்து 6 மாத காலத்தினுள் ஜனாதிபதி அதிகாரங்களை பாராளுமன்றிடம் ஒப்படைப்பாராயின் தயக்கமின்றி நாம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்போம்.
எமக்கு யார் பொது வேட்பாளர் என்பதை விடவும் பொது வேட்பாளர் கொடுத்த வாக்கினை காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியமானது என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *