Breaking
Thu. May 2nd, 2024
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காசா பகுதியின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. ஏராளமான உயிர்ப்பலியுடன் 50 நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதல் அந்தப்பகுதியையே மிகவும் சீரழித்துள்ளது.
இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்ட ஹமாஸ் வீரர்கள் தற்போது புகழின் உச்சத்தில் இருக்க, அந்நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாசின் அரசியல் செல்வாக்கோ மிகவும் சரிந்துள்ளது.
அமெரிக்காவை மத்தியஸ்தராகக் கொண்டு இஸ்ரேலுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு புதிய பாலஸ்தீன அரசை நிறுவ அவர் தொடர்ந்து எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் புதிய ஒரு அரசியல் திருப்பத்தை கொண்டுவர வேண்டிய நெருக்கடியில் அவர் உள்ளார்.
இந்த நிலையில் வெஸ்ட் பேங்க் பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேற ஒரு மூன்று ஆண்டுகால அட்டவணையை ஐ.நா பாதுகாப்பு சபையில் கோரும் ஒரு தீர்மானத்தை சமர்ப்பிக்க அப்பாஸ் தயாராகி வருகின்றார். ஐ.நா. பொது சபையில் வெள்ளிக்கிழமை அன்று அப்பாஸ் பேசியவுடன் இந்த தீர்மானம் அளிக்கப்பட உள்ளது.
இந்த நேரத்தில் காசா பகுதியை சீரமைக்கும் முயற்சியில் இறங்க உள்ள பாலஸ்தீனப் பிரதமர் ரமி ஹம்தல்லா, இதற்கான அவசர உதவியாக 3.8 பில்லியன் டாலர் நிதியினை பிற நாடுகளிடம் கேட்டுள்ளார்.
சவுதி அரேபியா 500 மில்லியன் டாலர் அளிப்பதாக உறுதியளித்துள்ளது, பிற நாடுகளும் விரைவில் உதவி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளன என்றும் உலகத் தலைவர்கள் இணைந்த ஐ.நா. சந்திப்பின் நடுவே நார்வே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஹம்தல்லா தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *