Breaking
Sat. May 18th, 2024

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான உலகப்போர் ஒன்று வல்லாதிக்க சக்திகளால் திட்டமிடப்பட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தருணத்தில் அதன் மீதிப்பட்டாசுகள் இலங்கையிலும் வெடிக்கும் அபாயத்தை மேலாதிக்க சக்திகள் இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்க முற்படுவதை புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் அனைவரும் ஏற்றுக் கொள்வர். இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இந் நாட்டையும் நம் தேச மக்களையும் ஈமானுக்கு ஒட்டிய விதத்தில் நேசிக்கிறோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று மாலை (11.12.2016) ஆரம்பமான போது
தொடக்கவுரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில்  விழாவில் சிறப்பு அதிதியாக MSS அமீரலி, தமிழ் நாடு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாஹ், பன்னாட்டு இஸ்லாமிய கழகத் தலைவர் பேராசிரியர் சே.மு.மு. முஹம்மதலி, தமிழ் நாடு தமிழ் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். சமய் பெரியார்களின் ஆசி உரையும் இடம்பெற்றது.

இஸ்லாமிய தமிழ் இலக்கய ஆய்வுக் கோவை மற்றும் மாநாட்டு மலர் என்பனவும் வெளியிடப்பட்டது.

அத்துடன் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்த பலர் இவ்விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது:

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இந்த ஆண்டில் ஆய்வுப் பொன்விழாவாக எமது நாட்டில் நடந்தேறுவதையிட்டு பேரானந்தம் அடைகிறேன். நான் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக கடமையாற்றும் இத்தருணத்தில் இந்த மாநாட்டின் தலைமையை ஏற்று வழிநடாத்துமாறு வேண்டுகோள் விடுத்த இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்கள் இஸ்லாமிய தத்துவஞானங்களின் உள்ளீடுகளைத் தமிழுக்கு விருந்தாக உவந்தளித்து தமிழ் மொழியின் இலக்கிய பரப்பிற்கு செழுமை சேர்த்த பாரம்பரியமே இஸ்லாமிய தமிழ் இலக்கிய மரபாகும். என்பதை இங்கு குழுமி இருக்கும் பெருந்தகைகள் அனைவரும் அறிவீர்கள்.

பதுர்தீன் புலவரின் இலக்கிய ஆளுமையை தமிழ் இலக்கியப்பரப்பு அங்கீகரிப்பதில் நேர்ந்த முரண்பாடுகள் 1966 ஆம் ஆண்டில் இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒன்றை மருதமுனையில் நடாத்த வேண்டிய தேவையை உருவாக்கியது. இலங்கை முஸ்லிம்கள் தமிழைத்தாய் மொழியாகக் கொண்டதன் காரணமே இஸ்லாமிய தத்துவ ஞானங்களைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தன்பால் ஈர்த்த ஒரு மொழியாக தமிழ் இருந்தமைதான் என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன். மாறாக வெறும் அரசியலுக்காக மத அடையாளத்துடன் தேசிய இனமாக எம்மை வரையறுக்கவில்லை என்பதையும் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இஸ்லாம் என்பதே சாந்தி எனும் மூலச் சொல்லில் இருந்து உருவானது. இறுதி இறைதூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்கள் இவ் அகிலத்தாருக்கு இறைவன் வழங்கிய அருட்கொடையாகும். சாந்தமும் அருளும் இணைவதால் சுவனத்தின் வாசம் கிட்டுமேயொழிய தீவிரவாதம் தலைதூக்காது.
என்பதை பறைசாற்றும் நிகழ்வாகவும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு – 2016 இனை நாம் பார்;க்கிறோம். இலக்கியம் ஒன்றுதான் இதயங்களை இணைக்கும் என்பதில் உறுதியாக இயங்கும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆட்சிக்குழு அனைவரையும் வாழ்த்துவதோடு அதன் தலைவர் காப்பியக்கோ டாக்டர் ஜின்னா சரிபுதீன், செயலாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோரின் அளப்பரிய பங்களிப்பினையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

2002 ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், உலக இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை கொழும்பில் நடாத்தியமையால் இலங்கையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கான தனது அங்கீகாரத்தினைத் தன்வயப்படுத்திக் கொண்டது. அமைச்சர்களாகிய நாம் கலை இலக்கிய ஆளுமைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து நமது முதுசமாகிய இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தினை அடுத்த சந்ததியிடம் கையளிக்கும் கடமையினையே நிறைவேற்ற வேண்டும். அரசியல், ஆன்மீகம், சமூகவியல், வரலாறு அனைத்தையும் யுகங்கள் தாண்டியும் ஆவணப்படுத்தி; வைப்பது இலக்கியம் ஒன்றுதான். இன்று இருக்கும் படைப்பாளிகள் மறையலாம். அமைச்சர்கள் மாறலாம். ஆனால் இலக்கியம் ஒன்றுதான் காலத்தின் விம்பங்களை ஆவணப்படுத்தும். அத்தகைய ஒரு பொறுப்புணர்ச்சிதான் என்னை இந்த மாநாட்டின் தலைமையை ஏற்க உந்தியது என்பதையும் நேர்மையாக இங்கு கூறிக்கொள்கிறேன்.

இந் ஆய்வுப் பொன் விழாவில் கலந்து சிறப்பிக்க வருகை தந்துள்ள இலக்கிய ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள் அனைவரையும் வாழ்த்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர் பேராசிரியர்கள், இலக்கிய அதிதிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிப்பூக்களைக் காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன். எம்மனைவரினதும் பணிகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக எனப் பிரார்த்தித்து இந்த மாநாட்டை தொடங்கி வைக்கின்றேன்.

7m8a5468 7m8a5386 7m8a5373

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *