Breaking
Mon. Apr 29th, 2024

– முகம்மட் பஹாத் –

திர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா
முஸ்லிம் மீடியா போரம் விடுக்கும் விஷேட அறிக்கை…

ஜனநாயக நாடான எமது நாட்டில் பல்வேறுபட்ட கட்சிகள் தேர்தலில்
போட்டியிடுகின்றன. தாம் விரும்பும் வேட்பாளளர்களைத் தெரிவு செய்வது அவரவர் உரிமையாகும்.

ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும். அதேநேரம் வாக்களிப்பதில் அசிரத்தையாக நடந்து கொள்ளவும் கூடாது. வாக்களிப்பது ஓரு ஜனநாயக உரிமை மட்டுமன்றி, இஸ்லாமிய நோக்கில் அது ஓர் அமானிதமும் சாட்சியமளித்தலுமாகும்.

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இந்நாட்டில் முஸ்லிம்களது
உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற, சமூக அக்கறையுள்ள, இன, மத பேதங்களுக்கு
அப்பால் நின்று மனித உரிமைகளை மதிக்கின்ற, மனிதநேயத்தை விரும்புகின்ற,
நாட்டிலிருந்து குற்றச் செயல்களை ஒழித்து நீதி, நேர்மை, சமாதானத்துக்காக உழைக்கின்ற
வேட்பாளர்களைத் தெரிவு செய்வது வாக்காளர் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

மற்றும் கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக
இருந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து,
இனவாதத்துக்கு துணையாக இருந்து நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்த மற்றும் வன்முறை, போதைப்பொருள் கடத்தல் போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்ட
அரசியல்வாதிகள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தகுதியற்றவர்களாகும்.

தனிப்பட்ட, சொந்த நலன்களை அடைந்து கொள்ளும் நோக்கில் அரசியலில்
தலைமைத்துவம் வழங்குவதற்குப் பொருத்தமானவர்களைப் புறக்கணித்து,
பொருத்தமற்றவர்களுக்கு வாக்களிப்பது சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெரும் தவறிலைத்தலாகும்.

வாக்குகளை வேறு எவருக்காவது கைமாற்றுதல், கள்ள வாக்குப் போடுதல் அல்லது வேறு வகையில் தேர்தல்
மோசடிகளில் ஈடுபடுவது நாட்டின் சட்டப்படி குற்றச் செயல்கள் மட்டுமல்ல,
இஸ்லாமிய நோக்கில் நம்பிக்கைத் துரோகமுமாகும்.

எனவே, இவற்றிலிருந்து முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். தமது
ஆதரவாளர்கள் தேர்தல் சட்டங்களை மீறாமல்
பார்த்துக் கொள்ளும் பொறுப்பு
வேட்பாளர்களுக்கும் உண்டு என்பதையும் ஞாபகமூட்டுகிறோம்.

நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள சிறந்த பிரதிநிதிகள் பாராளுமன்றம்
நுழைந்து, எமது நாட்டுக்கும் இங்கு வாழும் சகல சமூகங்களுக்கும் ஒளிமயமான
எதிர்காலம் ஒன்றை உருவாகுவதற்கு நாம் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்தவர் ஆவோம் என்று
முஸ்லிம் மீடியா போரம் கேட்டுக் கொள்கிறது என முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் கேட்டுக்கொண்டார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *