Breaking
Sat. Apr 27th, 2024

உதவி செய்வதன் மூலம் இன்பம் காண்பவர் அமைச்சர் றிஷாத் ;

சட்டத்தரணி துல்கர் நயீம் (முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர்)

ஜே.எப்.காமிலா பேகம்

கடந்த சனிக்கிழமை பொலன்னறுவை சி.டி.எஸ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் கிழக்குமாகான சபை உறுப்பினரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய சட்டத்தரணி துல்கர் நயீம் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

சுங்காவில் முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர்N.A.A.நாசர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இங்கு மேலும் சட்டத்தரணி துல்கர் நயீம் உரையாற்றுகையில்,

“இனவாதம் தலைவிரித்தாடும்  தற்போதைய சூழலில், சமூக அக்கறையுடனும் சுயநலம் அற்ற முற்போக்கான சிந்தனையுடனும் முஸ்லிம் இளைஞர்களாகிய நாம் வேகமும் விவேகமுமிக்க தீர்மானத்துடன் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கவேண்டிய தருணம் இது.

நமது சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் காப்பாற்றிக்கொள்வதற்காக தனித்துநின்று போராடும் சகோதரர் ரிஷாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவதற்காக எழுச்சிமிக்க அவரின் தலைமைத்துவத்தின் பின்னால் அணிதிரள்வோம்.

மிகக்குறுகிய காலத்திற்குள் அரசியலில் நுழைந்து இளம்வயதிலேயே அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக அல்லாஹ் எமக்கு அவரை அடையாளப்படுத்தினான்.

தனக்கு கிடைத்த பதவிகளைக்கொண்டு தன்னை அலங்கரித்துக்கொள்ளாமல் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் மற்றவர்களின் நல் வாழ்வுக்காகவும் ஓடி ஓடி உழைக்கக்கூடிய சுறுசுறுப்பான இவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் இன்பம் காண்பவர். உதவி என்று தேடி வருபவர்களுக்கு அவர்களின் தேவை அறிந்து அதனை நிறைவேற்றி விட்டு அதன்மூலம் அவர்கள் சந்தோசப்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைவார்.

அவரது வேகமும் விவேகமும், தனது பணியில் குறுக்கிடும் தடைகளை வீரத்துடன் தகர்த்தெறிந்து சாதித்து முடிக்கும் திறமையும் அவரை தலைமைத்துவத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.  இப்படிப்பட்ட ஒரு தலைமைத்துவத்தைத்தான் நாம் இத்தனை நாள் தேடிக்கொண்டிருந்தோம் என எமது மக்கள் நமது காது படவே பேசிக்கொள்கிறார்கள். எனவே இப்படிப்பட்ட ஒரு எழுச்சிமிக்க தலைமைத்துவத்தை வளர்த்தெடுப்பதும் பாதுகாப்பதும் நமது கடமை.

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றமானது வெளிப்படையாகவே சட்ட ரீதியாகவும் ஆவண ரீதியாகவும் நியாயமாக அமைந்துள்ள போதிலும் பேரினவாத அரசியல் மற்றும் அரசியல் சாராத பல்வேறு சக்திகளும் அவரை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதுடன் அவரை அரசியலில் இருந்து ஒதுக்கி ஓரங்கட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக சுமத்தி உள்ளே தள்ளுவதற்கும் முயற்சிக்கின்றனர்.

அவர்களால் சுமத்தப்படும் அத்தனை குற்றச்சாட்டுக்களுமே ஆதாரம் இல்லாமல் புஸ்வாணமாகி விடுகின்ற சூழலில் மீண்டும் பல்வேறு சூழ்ச்சிகளின் மூலம் புதிதாய் ஒரு பிரச்சினையை அவருக்கு ஏற்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர். இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது இவரின் அபரீதமான வளர்ச்சி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு பக்கபலமாய் அமைந்துவிடும் என்று- அஞ்சியே இத்தகைய அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

  அதேபோல் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களுக்கும் வில்பத்து  தொடர்பான முழுமையான தெளிவும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நியாயமானது என்பதும் நன்றாக தெரியும். அம்மக்களுக்குகாக  முன்னின்று உழைக்கின்ற சகோதரர் ரிஷாத் பதியுதீனை வீணாகவே சிங்கள் பேரினவாதிகழும் அத்தகைய ஊடகங்களும் அவதூறான செய்திகளை பரப்பி குற்றம் சுமத்துகின்றன என்பதும் இவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்த போதிலும் நமது முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. 25வருடங்களுக்கு முன்னர் வெறுங்கையுடன் விரட்டப்பட்ட எமது வடபுல சகோதரர்கள் மிகநீண்ட வலியையும் வேதனையையும் அனுபவித்த பின்னர் தற்போது நியாயமான ஒரு மீள்குடியேற்றத்தின் மூலம் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

இதற்கெதிராக கோசமிடும் சக்திகளுக்கெதிராக தாங்கள் குரல் கொடுப்பதன் மூலம் அது ரிஷாத் பதியுதீன் எனும் தனி நபரின் தலைமைத்துவ எழுச்சிக்கு காரணமாக அமைந்துவிடும் என்று இவர்கள் அஞ்சுவதனாலேயே மௌனவிரதம் அனுஷ்டிக்கின்றனர். ஆனால் மனிதாபிமானமுள்ள ஒருசில முஸ்லிம் அரசியல் தலைமைகள் நியாயத்தின் பக்கம் பேசுகின்றனர்.

அவர்களை நாங்கள் மெச்சுகின்ற அதேவேளை ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்தும் மௌனம் சாதித்தால், நாம் இப்பிரச்சினையை துடிப்புமிக்க இளைஞர்களிடம் விட்டுவிடுகின்றோம். நம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கின்ற எம்மினத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்காக குரல்கொடுக்கின்ற நாம் கூப்பிடு தூரத்திலுள்ள நமது வடபுல முஸ்லிம் சகோதரர்களுக்காக ஏன் குரல் கொடுக்கக்கூடாது.

கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் முஸ்லிம் மீடியா போரத்தினால் மறிச்சுக்கட்டி மீள்குடியேற்றத்திட்டம் தொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தெளிவு படுத்தும் நிகழ்வு ஒன்று இடம் பெற்றது. அதில் இக்குடியேற்றத்திட்டம் நியாயமானதும் சட்டபூர்வமானதும் என்பதற்கான சகல விளக்கங்களும் அளிக்கப்பட்டன, ஆவண ரீதியுலும் தெளிவுபடுத்தப்பட்டன.

இறுதியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உருக்கமான உரையொன்றை ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஆற்றினார். அந்த உரையில் தனது பிரதேச மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதிலிருந்து இன்றுவரை பட்ட வேதனைகள், துன்பங்கள், வலிகள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் என்பவற்றை விளக்கி கூறினார்.

 தான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தும் தனது மக்களுக்கு சுதந்திரமான முறையில் உதவி செய்ய முடியாமல் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டார் என்றும் ஒவ்வொரு அரசும் தமிழ் மக்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் விடயத்தில் புறக்கணித்த சம்பவங்களையும் கோடிட்டுக் காட்டினார். இத்தகைய தடைகளை எல்லாம் மீறி தனது மக்களின் மீள் குடியேற்றத்திற்காக தனது அமைச்சுப்பதவிகளுக்கும் அப்பால் தனிநபர் உதவிகளை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதையும், வெளிநாட்டு தூதுவராலயங்களின் உதவிகளையும் தனிப்பட்ட தனவந்தர்களின்  ஒத்தாசையையும் பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறெல்லாம் தான் கஷ்டப்பட்டேன்  என்று அவர் விளக்கிக்கூறிய போது பார்த்துக்கொண்டிருந்த பெரும்பாலானோரின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. அவருடைய உருக்கமான பேச்சு அரங்கில் நிறைந்திருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

இவருடைய இந்தப்பேச்சை கேட்கின்ற எந்தவொரு மகனும் அவருடைய புனிதமான இந்த போராட்டத்திற்கு நிச்சயமாக கைகொடுப்பானே தவிர எந்தவொரு விமர்சனத்தையும் செய்யமாட்டான். அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் இம்மீள் குடியேற்ற விடயத்தில் ஒன்றிணைந்து போராடுவோம்.

அதிலொரு அங்கமாக தற்போது அதற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் இரண்டுலட்சம் கையெழுத்து வேட்டையில் நாமும் பங்காளர்களாகி மற்றவர்களையும் கையெழுத்திட வைப்போம்.

துடிப்புமிக்க இளைஞர்களே! பொறுத்தது போதும். இம்மீள்குடியேற்ற விடயத்தில் இனியும் நாம் மௌனித்திருந்தால் பேரினவாதிகளின் முஸ்லிம்கள் மீதான அடக்கியாளும் அடாவடித்தனம் தொடர்ந்துகொண்டே இருக்கும். எனவே கட்சிபேதங்களை மறந்து நாம் அனைவரும் அமைச்சர் ரிஷாதின் பின்னால் அணிதிரண்டு உயிரோட்டமுள்ளதொரு சக்தியாக பரிணமிப்போம் “ என கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *