Breaking
Sat. May 4th, 2024

கொடிய உயிர்க்கொல்லி நோயான மலேரியா காய்ச்சலை தடுத்து, கட்டுப்படுத்தும் புதியவகை தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2013 ஆண்டில் மட்டும் மலேரியா பாதிப்பினால் 6 லட்சத்து 27 ஆயிரம் மக்கள் பலியாகினர். இவர்களில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 82 சதவீதம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நோயில் இருந்து உலக மக்களை காப்பாற்றும் முயற்சியில் கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதன் விளைவாக, இங்கிலாந்தை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘கிளாக்ஸோ ஸ்மித்கிலைன்’ நிறுவனம் மலேரியாவிற்கு காரணமான நோய்க் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் புதிய தடுப்பூசியை சமீபத்தில் கண்டுபிடித்தது.

பெரும்பாலும், கொசுக்களின் மூலமாகவே மலேரியா நோய் பரவுவதால் இந்த புதிய தடுப்பூசிக்கு ‘மாஸ்குய்ரிக்ஸ்’ (Mosquirix) என பெயரிடப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாஸ்குய்ரிக்ஸ் தடுப்பூசியை கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய யூனியன் அங்கீகரித்துள்ளது.

இந்த தடுப்பூசி மலேரியாவுக்கு எதிரான சிகிச்சை முறைக்கு புதிய தீர்வாக அமைந்துள்ளது. இது குழந்தைகள் உள்பட அனைவருக்கும் பாதுகாப்பான தடுப்பூசியாகும் என ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு வாரிய தலைமையகம் அறிவித்துள்ளது.

இதையடுத்தி, ‘மாஸ்குய்ரிக்ஸ்’  தடுப்பூசிகளை பெரிய அளவில் கொள்முதல் செய்ய உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது. எவ்வளவு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது?, அவற்றை எந்தெந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பது? என்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் விரைவில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாமா? என்பது தொடர்பாக ஒவ்வொரு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகமும் மிக தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே இதை தங்கள் நாட்டு மக்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கும் என்பது, குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *