Breaking
Fri. May 17th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டமொன்றில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு ஜனாதிபதியின் அருகில் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த இராணுவ கோப்ரல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

எனினும், எவ்வாறு நாமல் ராஜபக்ச மட்டும் இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் கோப்ரலை பாதுகாப்பு பிரிவில் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமலின் சாரதியாகவும் இராணுவ படைவீரர் ஒருவரே கடமையாற்றி வருகின்றார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியந்துள்ளது.

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸவில் வைத்து கைது செய்யப்பட்ட இராணுவ கோப்ரல் அந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் விடுதலை செய்யப்பட்டமை குறித்து உயர் மட்ட விசாரணைகளை புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் எவ்வித பொறுப்புணர்ச்சியும் இன்றி செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

எனினும், குறித்த இராணுவக் கோப்ரல் ஆயுதத்துடன் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றி வரும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவிற்கும் பொறுப்பாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது மெய்ப்பாதுகாவலரிடம் தண்ணீர் போத்தல் ஒன்றே இருந்தது – நாமல் ராஜபக்ச

எனது மெய்ப்பாதுகாவலரிடம் தண்ணீர் போத்தல் ஒன்று மட்டுமே இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டமொன்றில் நாமலின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதிக்கு அருகாமையில் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராணுவ கோப்ரலான இந்த நபரை பொலிஸார் கைது செய்து, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களின் வாயிலாகவே அறிந்து கொண்டேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி ஒருவர் பங்கேற்கும் நிகழ்வு ஒன்றிற்கு ஆயுதங்களுடன் செல்வதில்லை.

எனது தந்தை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் கொள்கை அடிப்படையில் எனது மெய்ப்பாதுகாவலர்கள் ஆயுதங்ளை எடுத்துச் செல்வதனை நான் அனுமதித்ததில்லை.

இந்த விடயம் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெளிவுபடுத்தினேன்.

இந்த விடயத்தை அவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

எனது மெய்ப்பாதுகாவலர் கூட்டத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.

கூட்டத்திற்கு சென்றவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் போத்தலையே அவர் வைத்துக் கொண்டிருந்தார்.

வேறு எந்த ஆயுதங்களையும் அவர் வைத்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *