Breaking
Thu. May 2nd, 2024
பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக, ராணுவப் பள்ளியில் தாக்குதலை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்திக்  கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், முறைகேடுகளை செய்து நவாஸ் ஷெரீப்  ஆட்சியை பிடித்ததாக குற்றம் சாட்டிவந்த இம்ரான்கான், ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி  வருகிறார். அதேபோன்று, ஷெரீபின்  ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக மதகுரு காதிரியும் போராட்டத்தில் குதித்தார். இம்ரான்கான்,  காதிரி ஆகியோர் கூட்டாக, போராட்டத்தை வழிநடத்திச் சென்றதால், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. நாடாளுமன்ற முற்றுகை, உச்சநீதிமன்ற முற்றுகை என அதிரடி  போராட்டங்களால், அரசு அதிர்ந்து போனது.
இந்த நிலையில், பெஷாவர் ராணுவப்பள்ளி மீது, தலிபான்கள் மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதில், 132 குழந்தைகள் உட்பட 148  பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, மகளிர் கல்லூரி மீதான குண்டுவீச்சு, ஆப்கானிஸ்தான் வங்கி  தாக்குதல் என, கைவரிசை நீண்டது. வடக்கு வஜிரிஸ்தானில் தங்களுக்கு எதிராக, அரசு மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி  கொடுக்கவே இந்த தாக்குதலை நடத்தினோம் என்று, தலிபான்கள் கூறியுள்ளனர்.
இம்ரான் கான் பேட்டி: இது தொடர்பாக நேற்று முன்தினம், இம்ரான் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு,  எங்களுடைய போராட்டத்தை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளோம். தீவிரவாதத்துக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன். அரசு  மீண்டும் முறைகேட்டில் ஈடுபட்டால், நாங்கள் வீதியில் இறங்குவதற்கு தயங்கமாட்டோம். என் வாழ்நாளிலேயே இதுபோன்ற கொடூரமான தாக்குதலை நான்  பார்த்ததில்லை. என்னுடைய குழந்தைகள் இதேபோன்று சுட்டுக் கொன்றால், நானும் அதேபோன்றுதான் பழிக்குப்பழி வாங்குவேன். இவ்வாறு இம்ரான்கான் பேசினார்.
உள்நாட்டு குழப்பம் முடிவுக்கு வரலாம்
எதிர்க்கட்சி தலைவர் இம்ரான்கான், மதகுரு காதிரி ஆகியோர் நடத்தி வந்த பெரும் போராட்டங்களால், பாகிஸ்தானில் கடந்த 4 மாதங்களாக உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு  வந்தது. போதாக்குறைக்கு, ஆங்காங்கே நடக்கும் குண்டுவெடிப்புகளும், கலகங்களும், அரசுக்கு நெருக்கடி கொடுத்தன. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு, ராணுவம்  ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டதால், பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியானது. இதனால், அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜி  ஜிங்பிங் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். இந்த நிலையில், தலிபான்கள்  நடத்தியுள்ள ராணுவப்பள்ளி தாக்குதலை தொடர்ந்து, இம்ரான்கான் தனது போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருப்பதால், அந்நாட்டில் உள்நாட்டுக் குழப்பம்  முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீப் வரவேற்பு
போராட்டத்தை நிறுத்திக் கொள்வது குறித்த இம்ரான்கானின் முடிவுக்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசு மீது, இம்ரான் கான்  சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க, ஆணையம் அமைக்கப்படும் என்று ஷெரீப் உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது,  ஷெரீபும், இம்ரான்கானும் சந்தித்து, ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக் கொண்டனர். பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதும், இருவரும் ஒன்றாக அமர்ந்து  இருந்ததால், அவர்களது ஆதரவாளர்களுக்கு இடையே இருந்து வந்த மோதல் போக்கு, முடிவுக்கு வந்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *