Breaking
Mon. Apr 29th, 2024

சுதந்திரத்திற்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இனரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே  இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமென்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வத்தளை ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தின் புதிய நுழைவாயிலை இன்று (13) திறந்து வைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

பாடசாலை அதிபர் எம்.எம். கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், மேல்மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஜோர்ஜ் பெரேரா ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினர். இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரான டாக்டர் கலாநிதி. எஸ்.எஸ். இஸ்மாயில், களனி வலைய தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளர் பொஸ்தின் உட்பட பாடசாலை அதிபர்கள், இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டமே இந்த நாட்டில் இனரீதியான பிரச்சினைகளின் தோற்றுவாயானது, சிங்களத் தலைவர்கள் தேர்தல் வெற்றிக்காகவும், தாம் தலைமை வகித்த கட்சிகளை ஆட்சியிலே  அமர்த்துவதற்காகவும் இனவாதத்தை உசுப்பி விட்டனர். இது நீறு பூத்த நெருப்பாக மாறி இனங்களுக்கிடையே சந்தேகத்தையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தியது.  தமிழ் மக்களுக்கு மொழி ரீதியான, தொழில்சார்ந்த கல்வி ரீதியான பாதிப்புக்கள் ஏற்பட்டதனால் தமிழ் இளைஞர்கள் தமது சமூகத்தின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, ஆயுதங்களைத் தூக்கத் தொடங்கினர்.

ஆயுதத்தில் நம்பிக்கை வைத்து அதில் நாட்டங்கொண்ட தமிழ் இளைஞர்களை ஜனநாயக வழிக்கு கொண்டு வருவதில் தமிழ்த் தலைமைகள் தயங்கின. அகிம்சை ரீதியில, ஜனநாயக வழியில் தமிழ்த் தலைவர்கள் போராடிய போதும் அவர்களின் மேடைப் பேச்சுக்களும், உணர்ச்சிகரமான உரைகளும், ஆயுத வழியில் நம்பிக்கை கொண்ட தமிழ் இளைஞர்களுக்கு தமிழ்த் தலைவர்களின் பேச்சுக்கள் மறைமுகமான உந்து சக்தியாகவும் அந்தக் காலத்தில் இருந்தது என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

30வருட கால யுத்தம், இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கியது. பல்வேறு அழிவுகளை நாங்கள் சந்தித்து இருக்கிறோம். யுத்தத்தின் இன்னுமொரு வெளிப்பாடாக வடமாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 20 வருட கால அகதி வாழ்க்கையில் அவர்கள் அவலப்பட்டனர். இன்னும் அந்த அவலம் தொடரவே செய்கின்றது.

சமாதானம் ஏற்பட்ட பின்னர், முஸ்லிம்கள் தமது சொந்த பிரதேசத்தில் குடியேற முயற்சித்து வருகின்றனர். சம்பந்தன், மாவை, சுமந்திரன் போன்ற தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களை மீளக்குடியேறுமாறு கூறுகின்றனர். எனினும் அதே கட்சியைச் சார்ந்த வேறு சில மக்கள் பிரதிநிதிகள் குடியேறவிடாது  தடுக்கின்றனர். மீள்குடியேறும் உரிமையையும் அங்கீகரிக்க மறுக்கின்றனர். இதுதான் இன்றைய நிலை. இதுமட்டுமன்றி, தமிழ்த் தாய்மார்கள் தமது உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு வீதிகளிலே கண்ணீருடன் நிற்பது  அன்றாடக் காட்சிகளாக மாறிவிட்டது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அழிவுக்குட்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். காணிப்பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, தொழில் இல்லாத பிரச்சினை இன்னோரன்ன பிரச்சினைகளை மூன்று சமூகமும் எதிர்நோக்கி வருகின்றது. அதுமட்டுமன்றி, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பல மாவட்டங்களைப்  பாதித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக சிதைவடைந்துள்ளது. இந்தப் பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பி மக்களுக்கு விமோசனம் கிடைக்க வழிவகுக்க வேண்டியது அரசின் பொறுப்பே. ஆனால் இத்தனை பிரச்சினைகள் நமக்கு இருக்கும் போது அவற்றிற்கு முன்னுரிமை வழங்காது, தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டுவர  இரண்டு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு இருக்கின்றனர். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கின்றனர்.  இந்த முயற்சியானது சிறுபான்மை மக்களின் குரலை நசுக்குவதற்கான சதியாகவே நாம் பார்க்கவேண்டியுள்ளது.

பேரினவாதிகள் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் குர்ஆனின் மீதும் இல்லாத பொல்லாத அபாண்டங்களை பரப்புகின்றனர். புனித குர்ஆனின் வசனங்களுக்கு பிழையான வியாக்கியானங்களை வழங்கி வருகின்றனர்.  ஊடகங்களைப் பயன்படுத்தி மிகவும் கச்சிதமாக இந்த செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

கம்பஹா மாவட்டப் பிரதேசங்களுக்கு சகோதரர் பாயிஸ் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி சேவையாற்றி வருவது ஏனக்கு மகிழ்ச்சி தருகின்றது. அவர் இந்த மாவட்டத்தின் பிரதிநிதியாக இல்லாத போதும் இங்குள்ள மக்களுக்கு உதவி அளித்து வருவது அவரது சேவை மனப்பான்மையையும் மக்கள் மீது கொண்டுள்ள அன்பையும் காட்டுகின்றது. பெற்றோர்களின் பங்களிப்புடன் இந்தப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில், அவர்கள் தமது மாணவர்களின் கல்வியில் கொண்டுள்ள அக்கறையையே காட்டுகின்றது.   உண்மையில் அவர்களை நாம் பாராட்டவேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

சுஐப் எம். காசிம்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *