Breaking
Tue. Apr 30th, 2024
கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின்  பிரதிநிதிகள்   சந்தித்து பேசினர். நேற்று இரவு (05) கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில் கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டாக்டர் அஸீஸ் , வர்த்தக சங்க தலைவர் சித்தீக் ஹாஜியார்,ஆகியோர் உட்பட கல்முனை முக்கியஸ்தர்களும்  கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூபும் பங்கேற்றார்.
கல்முனை விவகாரத்தில் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமெனவும் அதற்காக முழுமூச்சுடனும் செயற்படுமாறும்  இவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண,  காட்டி வருகின்ற அக்கறை  குறித்து கல்முனை மக்கள் சார்பில் தமது நன்றிகளையும் தெரிவித்தனர். எதிர்காலத்திலும் தொடர்ந்தும் ஒத்துழைப்பை  வழங்குமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இந்த விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் , கல்முனையில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் கல்முனை விவகாரத்தில் சுமூகமான தீர்வினை எட்டுவதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த காலத்தில் காட்டிய ஈடுபாடு போன்று  தொடர்ந்தும் தமது இதய சுத்தியான பங்களிப்பை நல்குமெனவும் உறுதியளித்தார்.
-ஊடகப்பிரிவு-

Related Post