Breaking
Sun. May 5th, 2024

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அரசாங்கத்தின் பத்துலட்சம்பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் முயற்சிகளுக்கு தனது பங்களிப்பை வழங்கி வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சிறியளவிலான தொழில் முயற்சியாளர்களின் கைத்தொழில் துறையை ஊக்குவித்தலும் பொதியிடல் துறை விருத்தி செய்தலும் என்ற கருப்பொருளிலான அதிகாரசபையின் திட்ட்த்துக்கு இணங்க அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர்கூட்த்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்  மஹிந்த அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர் அசோக்க, அமைச்சரின் பிரதியோக செயலாளர் றிப்கான் பதியுதீன் அமைச்சின் சிரேஸ்ட உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினுடாக புதியதோர் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளோம்.இரண்டு லட்சம் ரூபா சொந்த முதலீட்டை செய்து  தொழில் முயற்சி ஒன்றை ஒருவர் ஆரம்பித்தால் அந்த முயற்சியாளருக்கு கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை இரண்டு லட்சம் ரூபாவை இனாமாக வழங்கி தொழிற்துறையை மேம்படுத்தும் திட்டமே இதுவாகும்.

கைத்தொழில் துறையில் நாட்டமுடையோருக்கும் ஏற்கனவே இந்த திட்டத்தில் நாட்டம் கொண்டு நிதிப்பற்றாக்குறையினால்  தொழிற்துறையை முடக்கி வைத்திருப்போருக்கும் இந்த திட்டம் பெரிதும் பயனளிக்கும்.

கடந்த வருடம்  முதன்முறையாக பரீட்சார்த்தமாக இந்தத் திட்டத்தை ஆரம்பித்து, ஐந்து தொழில் முயற்சியாளர்களை  தேர்ந்தெடுத்து,அவர்களுக்கு  தலா ஐந்து லடசம் ரூபாக்களை வழங்கியிருந்தோம். அந்தத் திட்டம்  வெற்றியளித்ததன் பிரதிபலிப்பினாலேயே, அதிகமானோரை இந்த திட்டத்தின் மூலம் உள்வாங்கி தொழில் முயற்சியாளர்களுக்கு  உதவ முடிவெடுக்கப்பட்டது.

இந்த வருடம் 50தொழில் முயற்சியாளர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா வீதம் வழங்கிவைக்கப்படுகின்றது.நாடளாவிய ரீதியில் இந்த புதிய திட்டத்தை விரிவாக்கி, விசாலமாக்க பல்வேறு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான  கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையை ஜனாதிபதியும், பிரதமரும் எம்மிடம் ஒப்படைத்த பின்னர் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி நவீன திட்டங்களை செயற்படுத்திவருகின்றோம். கடந்த காலங்களில் இந்த நிறுவனம் ஆற்றிய பங்களிப்புடன் ஒப்பிடும் போது நாம் ஒருபடி மேலே சென்று புதிய தொழிற்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பான அடைவை ஈட்டுவதில் வெற்றிகண்டுள்ளோம். நாடளாவிய ரீதியில் மாவட்டங்களிலும்,தொகுதிகளிலும், பிரதேசபைகளிலும் புதிய கைத்தொழில் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன

கைத்தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது, இருக்கின்ற கைத்தொழிற்சாலைகளை மெருகூட்டி வலுப்படுத்துவது,புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, தொழில்நுட்பம் தேவையானோருக்கு அவற்றை பெற்றுக்கொடுப்பது, சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது, ஏற்றுமதி வசதிகளை பெற்றுக்கொடுப்பது, என்று பல்வேறு படிநிலைகளில் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை தனது பணிகளை முன்னெடுத்துவருகின்றது.

இந்த வருடம் பத்தாயிரம் புதிய கைத்தொழில்களை இந்த நாட்டில் உருவாக்கி அதன் மூலம் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே எல்லாத்திசைகளிலும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையானது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதை நான் பெருமித்துடன் கூறுவதோடு, புதிய திட்டத்தில் உள்வாங்கப்பட்டோர் இதன் மூலம் உரிய பயன்பெறவேண்டுமென  பிரார்த்திக்கின்றேன்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *