Breaking
Fri. May 3rd, 2024

கொழும்பு மாநகரில் நாளை 17 கட்சிகள் மேதினக் கூட்டங்களையும் மேதின ஊர்வலங்களையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையிட்டு கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலதிக பாதுகாப்புக் கடமையில் 5050 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.

2800 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காகவும், 2250 பொலிஸார் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 பொலிஸாரும், போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு என 1200 போக்குவரத்து பொலிஸாரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேதினத்தன்று அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மட்டும் கொழும்பு நகருக்குள் வருவதுடன் ஏனையோர் நகருக்குள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, காலி வீதியூடாக ஹைலெவல் வீதியூடாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கோ அல்லது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கோ வருபவர்களுக்கு விசேட வீதி போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று மேதின ஊர்வலங்களை ஏற்பாடு செய்துள்ளது.

டார்லி வீதி ஸ்ரீல.சு.க. பிரதான அலுவலகத்திலிருந்து ஹைட்பார்க் வரையிலும் முதலாவது ஊர்வலமும், டோசன் வீதியிலிருந்து ஹைட்பார்க் வரை இரண்டாவது ஊர்வலமும், லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து ஹைட்பார்க் வரையில் மூன்றாவது ஊர்வலமும் நடத்தப்படவுள்ளன.

கொழும்பில் நடத்தப்படும் சகல மேதின ஊர்வலங்களும் பகல் 12.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடத்தப்படவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி மாளிகாவத்தை பிரதீபா வீதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சங்கராஜ மாவத்தை சுற்றுவட்டம், மருதானை சந்தி, பொரளை சந்தி ஊடாக கெம்பல் மைதானத்தை ஊர்வலமாக வந்தடையும்.

ஜே.வி.பியின் மேதின ஊர்வலம் தெஹிவளை எஸ்.த. ஜயசிங்க மைதானத்திலிருந்து புறப்பட்டு வீ.ஆர்.சி. மைதானத்தை வந்தடையும். இதேபோன்று மஹஜன எக்ஷத் பெரமுன 8 சிறு கட்சிகளுடன் இணைந்து லலித் அத்துலத் முதலி மைதானத்தில் நடத்தவுள்ளது. இதன் ஊர்வலம் பொல்ஹேன் கொடையிலிருந்து ஆரம்பமாகும்.

மேலும் உள்ள கட்சிகளும் கொழும்பு கிராண்ட் பாஸ், புதிய நகர மண்டபம், சீ.எம்.யூ. தலைமை அலுவலகம், முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் உருவச்சிலை பகுதி, கலீல் விளையாட் டரங்கு, முத்தையா விளையாட்டரங்கு, சாலிகா விளையாட்டரங்கு போன்ற இடங்களிலும் மேதின கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *