Breaking
Mon. May 6th, 2024

-க.கிஷாந்தன் –

தமிழ், சிங்களம், முஸ்லீம் என மூவின மக்களும் இலங்கையில் ஒற்றுமையாக வாழும் ஒரே பிரதேசம் நுவரெலியா மாவட்டமாகும்.

இலங்கையில் உள்ள சிங்கள மக்களை இனவாதிகளாக வெளிநாட்டவர்கள் வர்ணித்து கேள்வி கேட்கின்றார்கள். ஆனால் இலங்கையில் ஒரு சில சிங்களவர்களே இனவாதிகளாவர். அனைத்து சிங்களவர்களும் அல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அட்டனில் தெரிவித்தார்.

மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ளும் முகமாக ஐ.தே.கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமமந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க இன்று அட்டன் நகருக்கு விஜயத்தினை மேற்கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தேர்தல் தொகுதி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வைபவத்தை அம்பகமுவ பிரதேச சபை ஐ.தே.காவின் பிரதம அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே பியதாஸ நெரிப்படுத்தினார்.

அட்டன் விஜிதா திரையரங்கின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் வைபத்திற்கு நாட்டின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், எம்.திலகராஜ் ஆகியோருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அட்டன் நகரில் அங்கத்துவத்தை இணைத்துக்கொள்ளும் அங்கத்துவ சிட்டை வழங்கி பேரணி ஒன்றும் இடம்பெற்றது.

இவ் வைபவத்தில் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முதன் முதலாக லக்ஷபானவில் மின்சாரம் பெறுவதற்கு வாய்ப்பு கிட்டியமையினால் அட்டன் பிரதேசம் அபிவிருத்தி கண்டது. பெயரும் வெளிவந்தது. இதனையடுத்து கொத்மலை, விக்டோரியா ஆகிய நீர்தேக்கங்கள் அமைக்கப்பட்டதனால் பாரிய மக்கள் குடியேற்றமும் இங்கு அமைக்கப்பட்டது.

1977இல் பிரஜா உரிமை அற்ற நிலையில் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நுவரெலியா மாவட்டத்தில் இருந்தார். இன்று ஏகப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி எதிர்காலத்தை முன்னோக்கி செல்லும் ஒரு கட்சியாகும். இக்கட்சியை சக்திமயப்படுத்துவது பொது மக்களின் கடமையாகும். இந்த நாட்டில் முன்னால் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் பிரமதாஸ உள்ளிட்ட இன்னும் பல ஜனாதிபதிகள் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருந்தாலும் நாட்டின் மாற்றத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாக செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்கள் பாரிய மாற்றத்தை எதிர்காலத்தில் உருவாக்கும்.

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் உருளைகிழங்கு விவசாயம் பாரியளவில் முன்னேற்றமடைந்து வருகின்றது. இக் கிழங்கு விவசாயத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேவேளை இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கிற்;கு சென்ற வாரத்தில் 40 வீத வரியை அதிகரித்துள்ளோம் என தெரிவித்த பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்ட மக்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக அவர்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு அடையச்செய்ய வீட்டு வசதிகள் மற்றும் காணி உரிமைகள் என அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்த அவர்க்கு இந்த அமைச்சை நாம் வழங்கியுள்ளோம்.

அதேபோன்று உயர் தர வகுப்பில் விஞ்ஞான கல்வி வளர்ச்சி பெறுவதற்காக எதிர்காலத்தில் சகல வசதிகளும் கொண்ட உயர்தர விஞ்ஞனா கல்லூரி ஒன்று இப்பகுதியில் நிறுவப்படவுள்ளது. வீட்டுரிமை மாத்திரம் அல்ல. மலையக மக்களுக்கு கல்வி உரிமையும் அவசியம் என்பதை காப்பதற்காக கல்வி இராஜாங்க அமைச்சராக வே.இராதாகிருஷ்ணனுக்கு இவ் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்றே பெருந்தோட்ட தொழிலாளர்களின் சகல விதமான அபிவிருத்திகளையும் தோட்ட தொழில் தொடர்பிலான அபிவிருத்திகளையும் எதிர்காலத்தில் முன்னெடுத்து செல்வதற்கு பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சை கடந்த ஓகஸ்ட் மாதம் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டது.

பெருந்தோட்டங்களில் வீடுகள், காணிகளை வழங்குவதற்கு அமைச்சர் திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ ஆகியோருக்கு அதிகாரங்கள் கொடுத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெருந்தோட்டங்களை நிர்வாகம் செய்து வரும் கம்பனிகளில் சிலர் தமக்கான இலாபத்தினை மட்டும் எதிர்பார்த்துக்கொண்டு மக்களுடைய நலனை கவனிக்காது செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான கம்பனிகளிடமிருந்து இந்த பெருந்தோட்டங்களை பெற்று தேசிய மற்றும் விதேசிய கம்பனிகளுக்கு வழங்கி தொழிலாளர்களின் நலத்தில் அக்கறை கொள்பவர்களாக மாற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

கல்வி ஊக்குவிப்பு நடவடிக்கையில் தோட்டப்பகுதிகள் மட்டுமன்றி கிராம பகுதி மாணவர்களையும் மேம்பாடு அடைய செய்யும் போது எழும்பும் தொழில் பிரச்சினையை நாம் கவனத்தில் கொள்வோம். இதற்கென தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி தொழில் பயிற்சிகளை ஆரம்பித்து தொழில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும்.

அதேவேளை கண்டி முதல் அம்பாந்தோட்டை வரை அவிசாவளை, ஹொரணை போன்ற பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ் வேலைத்திட்டங்களிலும் தொழில் அற்றவர்களுக்கு தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நுவரெலியா மாவட்டம் அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்லும் அதேவேளை அட்டன் நகரத்தையும் அபிவிருத்தி செய்வோம் எனவும் தெரிவித்தார்.

இந்த நாட்டில் மத்திய மாகாணத்தில் விவசாயதுறையை ஊக்குவிக்கவும் கைத்தொழில்துறையை ஊக்குவிக்கவும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேவேளை சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து பாரிய தொழில் வளர்ச்சியை நாம் ஏற்படுத்துவோம்.

இவ்வாறான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்லவும், பிரதேசங்கள் முன்னேற்றமடையவும் பாரிய சக்தி ஒன்று தேவைப்படுகின்றது. எதிர்காலத்தில் முன்னேற்றம் செய்யப்படும் இந்த சக்தியானது ஐக்கிய தேசிய கட்சி மூலமாகவே கிடைக்கும் எனவும், நாம் நாட்டை பாதுகாக்கவும் நல்லாட்சியை பாதுகாக்கவும் மக்கள் சக்தி அவசியமாக அமைய வேண்டும் என்பது வேண்டுக்கோளாகும்.

இளைஞர்களும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வேண்டும். மக்களுக்கான தெளிவூட்டல்கள் அவசியம். இதன் பிரதிபலிப்பு இளைஞர்களின் எதிர்கால அரசியலில் உள்வாங்கப்படும்.

சமூக ஊடகங்களுக்கு அப்பால் சென்று தொழில்நுட்ப ஊடக சக்தியை பெற நாம் உதவ வேண்டும். ஆகையினால் தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் ஊக்கப்படுத்துவோம் என தனது உரையில் தெரிவித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *