Breaking
Mon. Apr 29th, 2024

நாட்டின் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்து பேணிவருவதற்கு அரசாங்கம் அர்ப்பணத்தோடு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகங்களின் 53 ஆவது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு இம்மாதம் முதலாம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுகிறது. நாடுகளின் உள்ளூர் விமான சேவையினதும் தேச எல்லைகளைக் கடந்து மேற்கொள்ளப்படும் விமானப் போக்குவரத்தினதும் பாதுகாப்பு, வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த தன்மையினை உறுதி செய்ய வேண்டியது நாட்டின் சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகங்களின் பொறுப்பாகும்.

சிவில் விமான சேவைக்கு உரிய சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் நியமங்களை ஒருமித்த வகையிலும் நிலையான அடிப்படையிலும் நடைமுறைப்படுத்துவதற்கும் பின்பற்றுவதற்கும் கூட்டாக நடவடிக்கை எடுக்கும் நோக்குடன் 1960 ஆம் ஆண்டு இம்மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு 26 ஆவது மாநாடு இலங்கையில் நடைபெற்றுள்ளதுடன், இம்முறை 2016 ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் ஆசிய பசுபிக் வலய நிகழ்ச்சித்திட்டங்களில் குறித்த நாடுகளின் சிவில் விமான சேவை அதிகாரிகளின் மிக முக்கியமான சந்திப்பாக இம்மாநாடு அமைந்திருப்பதுடன், வலய நாடுகளின் விமான சேவை முன்னேற்றத்திற்கான மிக முக்கியமான விடயங்கள் இம்முறை நிகழ்ச்சி நிரலில் கலந்துரையாடலுக்காக உள்ளடக்கப்பட்டுள்ளது. இம் மாநாட்டில் சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர், வலயப் பணிப்பாளர் ஆகியோரும் பங்குபற்றுகின்றனர்.

சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் தலைவரும் பொதுச் செயலாளரும் இலங்கைக்கு விஜயம் செய்வது அவ்வமைப்பின் 71 வருட வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும். இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிவில் விமான சேவைத்துறையின் எதிர்காலத்திற்கு தேவையான மனித வள அபிவிருத்தி குறித்து இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதேபோன்று பாதுகாப்பு முகாமைத்துவ முறைமையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்து அவற்றை இற்றைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இம்மாநாடு இலங்கையின் விமான சேவையின் எதிர்கால பயணத்திற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது நாட்டின் கலாசார, சமய மற்றும் சமூக செயற்பாடுகளை மேம்படுத்தி நாட்டின் உல்லாச தொழிற்துறையை முன்னேற்றுவதற்கு உதவும் என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு இதன்போது ஒரு விசேட நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, அமைச்சர் ஜோன் அமரதுங்க, சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் தலைவர் கலாநிதி ஓலுமுயிவா பெனார்ட் அலியு, பொதுச் செயலாளர் கலாநிதி பிராங் லியு மற்றும் இலங்கை சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி.நிமால் சிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *