Breaking
Mon. May 6th, 2024

ஜனாதிபதி மைத்திரி அவர்களே;
அவர்களே என ஆரம்பிப்பதால் இது கடிதமென்று
நீங்கள் எண்ணுதல் கூடாது
இது ஒரு தேசத்தின் கண்ணீர்
பிரதமர் அவர்களும் கவனிக்க வேண்டுகிறேன்
இதுவானது ஓர் இனத்தின் வரலாற்று சோகம்

தேசபிதாக்களே
நீங்கள் மனித நேயத்தை
மடியில் சுமந்து வந்திருப்பதாய்
அடிக்கடி நான் சந்தோசிப்பேன்

ஆறாயிரம் ரூபாவிற்குள் பதவியேற்றது
எனது முதல் மகிழ்ச்சியானது
முதலில் நான் உங்களை நம்பவில்லை
நம்பும்படியாக முந்திய நிலைவரம் இருக்கவில்லை

பிறகு பிறகு நம்பிக்கை பிறந்தது
தலைவர்களுக்கு குறைவாயிருக்கிற நேயமானது
உங்களிடத்தில் அதிகமாயிருப்பதை அறிந்து கொண்டேன்
எளிமையும் தங்களை ரசிக்க வைத்தது

அதிகாரத்தை நீங்கள் பைகளுக்குள் போடவில்லை
இதுவரை மனைவியின் சமையலை உண்பவர் நீங்கள்
தனி விமானமெல்லாம் வைத்ததில்லை
வந்ததிலிருந்து குவியும் நல்ல பெயரும் கூட

நேபாளத்தில் பூமி பிளந்த போது
உங்கள் மனிதம் தேசம் கடந்து பேசப்பட்டது
நாங்களும் எங்கள் பங்குக்கு
சில பல உதவிகள் செய்தோம்

வெஷாக் அல்லது பொசன் வந்த போதெல்லாம்
உங்கள் மீதிருந்த அபிமானத்தால்
தொப்பியும் தாடியுமாய் தன்சல் கின்சலெல்லாம் பகிர்ந்து
கொஞ்சம் கூடுதலாய் ‘வொறு சோபன’ காட்டினோம்.

எங்கள் தேசத்தின் பிதாவே,
விடிந்ததும் நீங்கள் செய்திகளை வாசித்து விடுவீர்கள்
ஒரு ஆசிய தேசத்தின் அக்கிரமம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா
வரைபடத்தில் அதற்கு பர்மா என்று பெயர்
மியன்மார் என்றும் சொல்வார்கள்

நீங்கள் இலங்கைக்கு நேச பிதா போல
அங்கும் ஆங் சாங் சூகி எனும் நேச மாதா இருக்கிறார்
இப்போது புரிந்திருக்குமென நினைக்கிறேன்
நமக்கு நெருக்கமான நாடுதான்
புத்தரின் பௌத்தம் பேசுகிற நாடு

கரணிய மெத்த சுத்தங்…

தமது ஒரே குழந்தையை
தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து
காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே-
எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பைக்காட்ட
ஒருவர் பழகிக்கொள்ள வேண்டும்-

இது நான் சொன்னதில்லை
புத்தர் சொன்னது
அன்பினால் நிறைந்த மார்க்கம் பௌத்தம் சொன்னது
அது பர்மாவில் இல்லவேயில்லை

வக்கிரமும் வர்மமும் கொண்டலைகிறார்கள்
கோழியைச் சுடுவதைப் போல் பிள்ளையை எரிக்கிறார்கள்
எம் வனிதையரை வதைக்கிறார்கள்
உயிரின் பெறுமதி என்னவென்பதை
’சங்கைக்குரிய’ அசின் விராதுவுக்கு சொல்லுங்கள் பிதாவே

ரோஹிங்கியாவில் ஒரு வரலாற்று சோகம் நிகழ்கிறது
நீங்கள் சொல்வீர்கள் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்
பிதாவே, நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை
உங்களுக்கு யாரும் இது பற்றி சொன்னதில்லையா..?

கொல்லாமை போதிப்பவர்கள்
மனித உயிர்களை விதம் விதமாய் வதைக்கிறார்கள்
ஒரு இனம் பலர் கை கட்டி வாய் பொத்தியிருக்க
சுத்திகரிக்கப்படுகிறது

நடிகை அசினின் நாய் செத்தால் ‘அலர்ட் நியூஸ்’ போடுகிற உலகம்
ரோஹிங்கியாவை வேடிக்கை பார்க்கிறது
பாவம் அவர்கள்
வாழ்வதற்கு ஒரு மூலையைத் தவிர வேறு என்ன கேட்டார்கள்

மியன்மாரில் நிகழ்வது தர்மத்தின் போதனையா
மனித நாகரிகத்தின் கடை நிலை மனிதர்களா இவர்கள்
உயிர்களை உயிரோடு எரிக்கிறார்கள்
ரோஹிங்கியாவை சிதைத்து ஏப்பம் விடுகிறார்கள்

எங்கள் ஜனாதிபதி அவர்களே
நல்லாட்சியின் ஏனைய மைந்தர்களே
ரோஹிங்கியா அபலைகள் விடயத்தில்
உங்களின் மௌனம் மனிதாபிமானத்தை கேள்விக்குட்படுத்துகிறது.

உங்களிடமிருந்து ஒரு கண்டனமாவது எதிர்பார்த்தேன்
நல்லாட்சியின் அடையாள அறிக்கை அதுவுமில்லை
நீங்கள் அனைவரும் உள்நாட்டில்
எனக்கு ஆங் சாங் சூகி போல
‘வொறு சோபன’ காட்டும் ஊமையர்களாய் தெரிகின்றீர்கள்.

-எஸ்.ஜனூஸ்-

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *