Breaking
Mon. Apr 29th, 2024

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை யாருமே கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.தமிழகத்தையே அந்தத் தீர்ப்பு ஒரு கனம் உலுக்கியது என்றால் மிகையாகாது என்றே கூற வேண்டும்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வழக்குத் தாக்கல் செய்து பல வருடம் கடந்த பின்பு இத் தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும்,இத் தீர்ப்பு என்னவோ?எடு பிடி என வழங்கப் பட்டது போன்றே அவதானிக்க முடிகிறது. ஜெயலலிதா இற்கு வழங்கப்பட்ட தண்டனைக்கான நேர மாற்றம்,அ.தி.மு.க ஆதரவாளர்களால் பிரச்சனைகள் எழாது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிறைக்கு அழைத்துச் செல்ல செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் போன்றவற்றை அவதானிக்கும் போது தீர்ப்பு ஏலவே நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று போன்றே அவதானிக்க முடிகிறது என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ப.ஜ.க தலைவர் மோடி இந்தியப் பிரதமராக வந்ததன் பின்னர் இந்தியாவின் இலங்கை தொடர்பான நிலைப் பாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும் என பலரும் ஆரூடம் தெரிவித்தனர்.மோடியின் வெற்றிக்கு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுகள் அதீத தாக்கம் செலுத்தியதே இவர்களின் ஆரூடத்தித்திற்கு அடிப்படையாய் அமைந்தது.யாவரினதும் ஆரூடங்கள் புஸ்வனமாகிப் போய்விட்டது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.முன்பிருந்ததை விட இலங்கையுடனான இந்தியா இனது நெருக்கம் அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

அண்மையில் இந்திய வந்த ப.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி இலங்கை அரசாங்கத்தினை புகழ்ந்தும்,”சுப்ரமணிய சுவாமியின் நிலைப்பாட்டில் இந்திய இல்லை” என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறும் அளவு அதனது செயற்பாடுகளை கண்டித்துப் பேசியது மாத்திரமின்றி தன்னை பிரதமர் மோடியே அனுப்பி வைத்ததாக கூறியும் உள்ளார்.இலங்கை செல்ல வழி அனுப்பி வைத்தவர் இவரினது இலங்கை தொடர்பான கருத்துக்களுக்கு வாய்க்கால் வெட்டாமலா இருந்திருப்பார்?

இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை அறிய “இலங்கை அரசுடனான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடுவதை நிறுத்துமாறு மத்திய அரசு,அரசியல் சாசனத்தின் 256 வது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.”என சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்டிருந்தமையே போதுமானதாகும்.

இலங்கையுடனான இந்திய உறவிற்கு பெரும் தடையாக இருப்பவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை மறுக்க இயலாது.அண்மையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்காவிட்டால் போராட்டம் செய்யப் போவாதாக அறிவித்தது மாத்திரமின்றி ஒரு நாள் அவகாசம் மாத்திரமே வழங்கி இருந்தார்.இலங்கை அரசும் இவரினது கோரிக்கைக்கு அடி பணிந்து இந்திய மீனவர்களை விடுவித்திருந்தது.

இலங்கையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எந்தளவு கடுப்பில் உள்ளது?என்பதை அறிய இலங்கைகையினது உத்தியோக பூர்வ பாதுகாப்பு இணையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் கற்றுறை,கேலிச் சித்திரம் போன்றவை வெளி இடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றையும் விட “இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருதை வழங்க ஆராயுமாறு” இந்தியப் பிரதமர் மோடிக்கு ப.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.இதை விட ஒரு ஆதரவை எங்குதான் காண இயலும்?

இலங்கையுடனான இந்திய உறவிற்கு பெரும் தடையாக இருப்பது ஜெயலலிதா என்ற நாமம் தான்.மோடியை பிரதமர் ஆசனத்தில் அமர்த்த ஜெயலலிதா மிகப் பெரிய பங்காற்றி இருந்தார்.மோடி பிரதமராக ஜெயலலிதாவினது கட்சியான அ.தி.மு.க இனது ஆதரவு தேவைப்படாத போதிலும் ஜெயலலித்தாவின் ஆதரவினால் மக்களிடையே ஏற்பட்ட உளவியல் தாக்கம் மோடியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பைச் செய்திருந்தது.

அண்மையில் நடை பெற்று முடிந்த 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 122 இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக திகழ்கின்ற போதும் ஆட்சி அமைக்க பா.ஜனதா இற்கு இன்னும் 22 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பது ப.ஜ.க வீழ்ச்சி காண ஆரம்பித்திருப்பதையே சுட்டி நிற்கிறது.

இன்னும் 20 மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க இனது தேவையை ப.ஜ.க உணராலாம் என்பதை மராட்டிய சட்டசபை தேர்தல் எமக்குத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றதல்லவா? இலங்கை மீதான இந்தியாவினது போக்கு போன்ற பல்வேறு காரணிகளால் காரணிகளால் நிச்சயம் அ.தி.மு.க ஆனது ப.ஜ.காவை எதிர்க்கும் என்றே பலரும் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் மாத்திரமே உள்ளன.அதற்குள் தமிழ் நாட்டில் 35 சதவீத வாக்கு வங்கியை கொண்டிருக்கும் அ.தி.மு.கா இனது செல்வாக்கை ப.ஜ.க உடைத்தாக வேண்டும்.மக்கள் ஆதரவு அ.தி.மு.கா இற்கு மிகைத்திருப்பதால் நேரடியாக அதன் செல்வாக்கை உடைப்பது அவ்வளவு எளிதானதல்ல.ஜெயலலிதாவை இவ்வாறான புகார்களில் சிக்க வைத்து அவரினது செல்வாக்கை மக்களிடம் நிர்மூலமாக்குவதன் மூலம் அ.தி.மு.காவை மக்களிடையே செல்லாக் காசாய் மாற்றும் முயற்சிக்கான ஒரு சிறு அடித்தளமாகவே இதனை பார்க்க முடிகிறது.இவ் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இற்கு எதிராக சுப்ரமணிய சுவாமி பாரிய பங்காற்றி இருந்தமையே இதனை அறிய போதுமாகும்.

ஜெயலலித்தாவினது தமிழக மக்கள் ஆதரவை வெளிக்காட்ட அ.தி.மு.க எதிரிகளால் ஜெயலலிதாவிற்கு அமைத்துக் கொடுக்கப் பட்ட நல்லதொரு சந்தர்ப்பமாகவே ஜெயலலிதா மீது வழங்கப் பட்ட தீர்ப்பு அமைந்துள்ளது. ஜெயலலிதாவினது தமிழக ஆதரவு கண்டு எதிரிகளுக்கு குலை நடுங்க ஆரம்பித்துள்ளது என்றே கூற வேண்டும்..எதிர்காலத்தில் ஜெயலலிதா தடைகள் பல தாண்ட இத் தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக அமையப் போகிறது என்பதே உண்மை.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *