Breaking
Mon. Apr 29th, 2024

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதி கடந்த வெள்ளிக்கிழமை (05) மாலை  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றினர்.

1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலம் முதல் சென். ஜோன்ஸ் மீன் சந்தையாகவும் 1983 ஆம் ஆண்டு முதல் மீன் சந்தையுடன் மத்திய கொழும்பு சந்தை கட்டடத் தொகுதியாகவும் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த மேற்படி கட்டடத் தொகுதி, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி அபிவிருத்தி திட்டத்தின் முதல் கட்டமாக கீழ் மற்றும் முதலாம் மாடிகளில் 83 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 80 கடைகள் இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரண காட்சி அறைகளாக பயன்படுத்தப்படவுள்ளன. அத்துடன் இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் கிளை ஒன்றும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற் கொண்டு இரண்டு வங்கிகளும் திறந்து வைக்கப் பட்டன.

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப் பட்டுள்ள கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பூரண வழிக்காட்டலில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(NS)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *