தனியார் துறையினருக்கான ரூபா 2500 சம்பள உயர்வு வழங்கல் மற்றும் அடிப்படைச் சம்பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்ற விடயங்கள் சட்டமாக்கப்படும் எனத் தெரிவித்த தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண.
ஊழியர் சேமாலாப நிதி, நம்பிக்கை நிதி இரண்டையும் இணைத்து ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் ஜோன் செனவிரட்ண இதனை தெரிவித்தார்.
கடந்த 100 நாள் ஆட்சியில் நிதியமைச்சர் அரச துறையினருக்கும் தனியார் துறையினருக்கும் ரூபா 2500 சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைத்தார். ஆனால், தனியார் துறையினர் அனைவரும் இச்சம்பள உயர்வை வழங்கவில்லை. சிலர் ரூபா 1000 ஐ மட்டுமே வழங்கினார்கள்.
இவ்வாறானதோர் நிலையில்தான் தனியார் துறையினருக்கு ரூபா 2500 சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டமூல நகல் தயாரிக்கப்பட்டு அது சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அது கிடைத்தவுடன் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு ரூபா 2500 சம்பள உயர்வு வழங்கல் சட்டமாக்கப்படும். இதேபோன்று தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால், சுப்பர் மார்க்கட் உட்பட பல தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் 10 மணித்தியாலத்திற்கு மேலதிகமாக வேலை செய்கின்றனர்.
எனவே, எதிர்காலத்தில் தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் ரூபா 10,000 ஆக இருக்க வேண்டும் என்பதையும் சட்டமாக்க திட்டமிட்டுள்ளோம். இன்று படித்த இளைஞர்கள் அரச துறையிலேயே தொழில்களை கேட்கின்றனர்.
தங்களது படிப்புக்கு ஏற்ப இல்லாவிட்டாலும் கீழ் நிலை தொழிலையாவது வழங்குமாறு கேட்கின்றனர். ஏனென்றால் அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் மரணிக்கும் வரை ஓய்வூதியம் கிடைக்கும். இறந்த பின்னரும் தம்மை சார்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதனாலேயே ஆகும்.
எனவே, அவர்கள் அரச துறையில் தொழில் புரிய விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டே அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் இரண்டையும் இணைத்து ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தெரிவித்தார்.