Breaking
Sun. May 19th, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அஸாத் ஸாலி மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் மஹிந்தவுடையதோ அல்லது கோத்தபாயவினுடையதோ அல்ல. அந்தக் காணிகள் தமிழ், முஸ்லிம் மக்களின் சொந்தக் காணிகளாகும். அதை உரிய மக்களிடம் கொடுக்கவேண்டாம் என்று சொல்வதற்கு தினேஷ் குணவர்தனவும் கோத்தபாயவும் யார்?

யுத்தக் காலத்தில் பாதுகாப்புத் தேவை கருதியே தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியது. இப்போது தினேஷ் குணவர்தனவும், கோத்தபாயவும் அதைக் கொடுக்கவேண்டாம் என்கின்றார்கள். மூவின மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் சூழல் உதயமாகியுள்ளது. இந்தச் சூழலைக் கெடுத்து நாட்டில் மீண்டும் இனவாதத்தை விதைத்து சிறுபான்மைச் சமூகத்தை அடக்கியாள தினேஷ் குணவர்தனவும், கோத்தபாயவும் முயல்கின்றனர். அதற்கு இனியொருபோதும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்கமாட்டார்.

கடந்த திங்கட்கிழமை இரவு கோத்தபாயவின் வீட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருசில முன்னாள் அமைச்சர்கள் ஒன்றுகூடி தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவருக்கும் பயப்படக்கூடியவர் அல்லர். இன்று முழு சர்வதேசமே அவரை வரவேற்கின்றது.

தேசிய கீதம் தமிழில் பாடுவது தமிழ் பேசும் மக்களின் உரிமை. அந்த விடயம் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படுகின்றது. தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது என்று இலங்கை அரசமைப்பில் இல்லையெனத் தெளிவாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் விளக்கியுள்ளனர். அதற்கு எதிராக வேண்டுமென்றால் விமலும், தினேஷூம், ஞானசார தேரரும் மாத்திரம் இருப்பார்கள். மாறாக, சிங்கள மக்கள் இருக்கமாட்டார்கள். ஏனென்றால், சிங்கள மக்கள் இவர்களை அரசியலிலிருந்து ஒதுக்கியுள்ளனர். இவர்கள் இனவாதத்தை இனி இந்த நாட்டில் விதைக்க முடியாது.

இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்புக் குறைவாம். முன்னர் இருந்த ஜனாதிபதிகள் பதவிக்காலத்தின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றனர். ஆனால், மஹிந்த மக்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் 212 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடனும் 20 இற்கு மேற்பட்ட வாகனங்களுடனும் வாழ்கின்றார். ஆனால், மஹிந்தவுக்குப் பாதுகாப்பு போதாது என்று சிலர் கதை விடுகின்றனர்.” என்றுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *