Breaking
Thu. May 2nd, 2024

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழர் பிரதேசங்களிலும் தேசிய கீதத்தினை தமிழில் பாடுவது மிகவும் சிறந்ததாக அமையும் எனவும் இனிவரும் காலங்களில் நான் இங்கு வருகை தரும் போது தமிழிலோ, ஆங்கிலத்திலே தான் பாடவேண்டும் என கௌரவ சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் நான் இங்கு மிகுந்த மனவேதனை அடைகின்றேன் காரணம் தமிழில் பேசமுடியாதமையினை இட்டு இதற்கு முதற்காரணம் எமது நாட்டில் உள்ள கல்விக் கொள்கையாகும் எம்மைப் பொறுத்தவரையில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு பாடங்களும் ஒழுங்கான முறையில் கற்பிக்கப்படவில்வை என்பதுதான் உண்மை.

நீங்கள் தற்போது நாட்டின் தேசிய கீதத்தினை சிங்களத்தில் பாடி இருந்தீர்கள். ஆனால் உங்கள் எத்தனை பேருக்கு அது விளங்கியிருக்கின்றது என்று எனக்கு தெரியாது. அதன் காரணமாக அடுத்த முறை இந்த வைத்தியசாலைக்கு வருகைதரும் போது தேசியகீதத்தினை தமிழில் பாடவேண்டும் என்பதனை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலே தேசிய கீதத்தினை தமிழில் பாடப்படவேண்டும் என்பதில் குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன் குறிப்பாக நானும் வாசுதேவ நானயக்காரரும் நாங்கள் இருவரும்தான் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்று கூறியபோது அதனை எதிர்த்தவர்கள் நாங்கள் இருவரும்தான் என்பதனை உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நூங்கள் இந்த நாட்டிலே ஒரு ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கின்றோம் அவ்வாறு ஏற்படுத்தி விட்டு தமிழில்தான் தேசிய கீதத்தினை பாடவேண்டும் எனவும் கேட்டிருக்கின்றோம். தேசிய கீதமானது சிங்களத்தில் எவ்வாறு அழகானதோ அவ்வாறு தமிழிலும் அழகானது அவ்வாரான தேசிய கீதத்தினை தமிழில் பாடுவதில் என்ன குறை இருக்கின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஆரம்பித்த கொள்கைகளின் அடிப்படையிலே எமது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றது அதற்கிணங்க இன்று அம்பாறையிலும் கல்முனையிலும் வைத்தியசாலைகளுக்குச் சென்று பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்திருக்கின்றோம்.

தேர்தலுக்கு முன்னர் இங்கு வந்து சென்றிருந்தோம். அந்த நேரம் இங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களுக்கு மிகுந்த வரவேற்பு செய்திருந்தார்கள். அதனால்நான் ஜனாதிபதியிடம் கூறினேன்.

கட்டாயமாக நாங்கள் அம்பாறைக்கும் கல்முனைக்கும் போக வேண்டும் என்று கூறினேன் அவர் தவிர்க்கமுடியாத காரணத்தினால் இங்கு வருகைதர முடியாமல் போய்விட்டது.தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள வாக்குப் பெட்டிகளை எண்ணுகின்ற போது அதிகமான வாக்குகள் எங்களுக்கே கிடைத்திருந்தது. ஆனால் வெற்றிலைக்கு குறைந்தளவான வாக்குகளே கிடைத்திருந்தது.

இந்த நாட்டிலே தாங்கள் இரண்டாம் தர பிரஜைகள் என்று எண்ணியிருந்த மக்கள் தற்போது முன்னிலைக்கு வந்திருக்கின்றார்கள். எங்களதும் தற்போதைய ஜனாதிபதியின் கொள்கை என்னவென்றால் இந்த நாட்டிலே இரண்டாம் தர பிரஜை என்ற ஒன்று இல்லை என்பதுதான்.

எங்களது அடிப்படை கடமைகளில் ஒன்று இந்த நாட்டிலே பிரிவினை அற்ற ஒரு சமுதாயத்தினை கட்டியெழுப்பவேண்டும் என்பதுதான் நாங்கள் அனைவரும் இலங்கையர் என்ற ஒரு எண்ணம் எங்கள் அனைவரது உள்ளத்திலும் இருத்தல்வேண்டும்.

நான் தற்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் மூன்று மாதங்களுக்கு ஒருதடவை கூடி எதிர்கால திட்டம் பற்றி ஆராய வேண்டும் என்று கூறியிருக்கின்றேன்.

சுகாதார அமைச்சை கட்டியெழுப்புவதற்காக நான் மாகாணம், மத்திய அரசு என்று பிரித்து பார்த்து சேவைசெய்ய விரும்பமாட்டேன். மாகாணசபைக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கப்படுகின்றது அதனை கொண்டு ஒழுங்கான வேலைத்திட்டங்களை செய்து முடிக்க முடியாது அதன்காரணமாக அவர்களிடம் கேட்டிருக்கின்றேன் எங்கெல்லாம் வளப்பற்றாக்குறை நிலவுகின்றதோ அதனை தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டிருக்கின்றேன் எனவும் கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *