Breaking
Sat. Apr 27th, 2024

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இல்லை என்றால் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க முடியாது போகும். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைய அவசியமானது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்போம்” என்பவர்களுக்கு கட்டுக்கட்டாக (அமெரிக்க) டொலர்கள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிலர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கூடாதென்கிறார்கள். ஜனாதிபதி முறையிலன்றி சமூகத்திலேயே தவறு இருக்கின்றது. சமூகத்தின் எதிர்கால நிலைமையைக் கட்டுப்படுத்த தவறுவோமானால் நாடு அழிவுப் பாதைக்கே செல்லும்.

ஜனாதிபதி முறை இல்லாது போனால் இவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் போகும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை பற்றி பேசுபவர்கள் தேர்தலில் வாக்குகளை எதிர்பார்த்தே அதனைப் பேசுகின்றனர். இவர்களது அடிவருடிகளாக இருக்கும் சக்திகள் அவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த முயற்சிக்கின்றன.

எமக்குத் தேவைப்படுவதெல்லாம் இலங்கையை ஆசியாவின் ஒரு உன்னத நாடாக மாற்றுவதுதான். இந்தப் பயணத்தை நாம் தொடர்வதற்கு இளைஞர்களையும் அதில் இணைத்துக்கொள்வது முக்கியமாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் பலப்படுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். நாடு பிளவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கும் தறுவாயில் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் மூலம் மாத்திரமே நாம் அதனை முறியடிக்க முடியும். அவ்வாறு இல்லையாயின் நாடு மிகவும் ஆபத்தான நிலையை சந்திக்க நேரும்” என்றுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *