நான் வளர்ந்தது வெஹர விகாரையில்,அதிகமாக பழகுவது சிங்களவர்களுடன் எனவே, நான்இனவாதி இல்லை என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது கொலன்னாவை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது குறித்த பிரதேச மக்களுக்கு பல்வேறு வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இணையங்கள் ஊடாக இனவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்தர்ப்பத்தில் பலர் இனவாதங்களை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இனவாதத்தை தூண்டுபவர்கள் பாதிக்கப்பட்ட கொலன்னாவை மக்களுக்காக அரிசி ஒரு பெக்கட்டை கொண்டு வந்து கொடுத்து விட்டு தற்போது இனவாதத்தை பேசுவதாகவும் மரிக்கார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த 39 வருட காலத்தில் நான் தீவிரவாதத்தில் இரகசியமாக செயற்பட்டதில்லை.ஏனெனில் நான் படித்தது முதல் பழகியது வரை சிங்களவர்களுடன்.
அது மட்டுமின்றி சிங்கள ஊடகமொன்றிலேயே தான் பிரதானியாக இருந்ததாகவும்,சிங்கள மக்களது கலாச்சார பண்பாடுகளை நன்கு அறிந்தவன் தான் என்றும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எனது கொலன்னாவை பிரதேசத்தில் சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர் ஒற்றுமையாக வாழ்வதனாலேயே இந்தப் பிரதேசத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிங்கள மக்களின் அதிகமான வாக்குகளினாலேயே தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் ஒருபோதும் இன ரீதியாக சேவையாற்ற மாட்டேன் என்றும் தெரிவித்துள்ள மரிக்கார், என் மீது எவ்வித குற்றச்சாட்டுகளை வேண்டுமானாலும் முன்வைக்கட்டும் ஆனால், என்னை இனவாதியாக மட்டும் சித்தரிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.