Breaking
Sun. May 5th, 2024

ஊடகப்பிரிவு

மனசாட்சி, மனித நேயம் மற்றும் இறையச்சம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சமூகங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்படும் பிரச்சினைகளும் வெகுவாக குறையும் என்று அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (30) இடம்பெற்ற் ஜனாதிபதி நடமாடும் சேவையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் தலைமையில் பல கட்சிகள் கூட்டாக இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான பங்காளிகள் சிறுபான்மை மக்களே.
கடந்த காலங்களில் நாம் பட்ட துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் விடிவு கிடைக்கும் என்ற அபரிமிதமான நம்பிக்கையிலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய அரசை உருவாக்கினோம்.

நாம் உருவாக்கிய அரசில் எங்களுக்கு வேண்டியவைகளை கேட்டுப் பெறும் உரிமை நிறைய இருக்கின்றது. அதே போன்று அவற்றை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு நிரம்ப உண்டு. எமது தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் எவரும் இலகுவில் புறந்தள்ளிவிட முடியாது. மறந்தும் விட முடியாது.

ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தவர்களும் ஆட்சியை தீர்மானித்தவர்களும் சிறுபான்மை மக்கள் தான் என்பதை மார்தட்டி உரத்து இன்றும் சொல்கிறோம். என்றும் சொல்லுவோம். எமது பிரச்சினைகளை கணக்கில் எடுக்காமல் எவரும் இருக்கமுடியாது. தள்ளிப் போடவும் முடியாது.

யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர் பிரச்சினை, காணிகளை பறிகொடுத்து கையறு நிலையில் இருப்பவர்களின் வேதனை, சிறையில் வாடும் அப்பாவி இளைஞர் யுவதிகளின் விடுதலை, தொழில் இல்லாத் திண்டாட்டம் மற்றும் நீறு பூத்த நெருப்பாகி இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி தெருவில் வந்து ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தும் எமது மக்களின் நிலை கண்டு வேதனை அடைகின்றேன்.

நமக்கிடையே அரசியல் ரீதியான கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். மதங்கள் வேறுபட்டு இருக்கலாம் .எனினும் மனிதர்கள் என்ற அடிப்படையில் மனிதாபிமானத்தால் நாம் கட்டுண்டு இருக்கின்றோம்.

“இந்த உலகில் சொற்ப காலமே நீங்கள் வாழ அனுப்பப்பட்டு இருக்கின்றீர்கள்” என எங்களது இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்துகிறது. நாம் வாழும் காலத்தில் மனசாட்சியுடனும் மனிதாபிமானத்துடனும் இறையச்சத்துடனும் செயற்படவேண்டும். எந்த பணியிலும் மனச்சாட்சியை முன்னிறுத்திக் கொண்டால் பிரச்சினைகள் இலகுவில் தீரும்.

சிறுபான்மை மக்களுக்கு நாளாந்தம் பிரச்சினைகள் தேடித் தேடி வருகின்றன. புதிது புதிதாக அவை முளைக்கின்றன. எல்லோருடனும் ஒற்றுமை பேணவே விரும்புகிறோம். மற்றவரின் துன்பத்தில் மகிழ்ச்சி காணவேண்டும் என என்றுமே நினைப்பதில்லை.

ஜனாதிபதி நடமாடும் சேவை பல தேவைகளை நிறைவேற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. வவுனியா அரச அதிபர் சிங்கள சகோதரராக இருந்த போதும் அவரது பணிகள் சிறப்பானவை.

கட்சி அரசியலால் அரசியல் வாதிகள், வேறுபட்டு இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை பெற்றுக்கொடுப்பதில் ஒருமித்த பங்களிப்பை நல்க வேண்டும். வெறுமனே வாய்ப்பந்தலில் ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டு இருக்காமல் செயலுருவில் காட்டுவோம். அதே போன்று அதிகாரிகளும் அரச ஊழியர்களும் மக்கள் பணியாற்றுவதில் சமத்துவத்தையும் நீதியையும் காட்டுங்கள். அழுக்கு உடையிலோ அழகான உடையிலோ எப்படி வந்தாலும் அவர்களின் தேவைகளை அன்போடு நிறைவேற்றுங்கள். நொந்து போய் இருப்பவர்களை மேலும் நோகடிக்காதீர்கள் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *