Breaking
Sat. May 18th, 2024

நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி விரிவுரையாளர்

ஆலிம்கள் உலமாக்களை ஏதாவது சொல்லிவிட்டால் கொதித்தெழும் நமது சமூகம் உண்மையில் உலமாக்களை நேசிக்கிறார்களா என்றால் இல்லை என்பது தான் பதிலாகும்.

பள்ளிவாசல்களில் இமாமாக பணி புரியும் உலமாக்களுக்கு குறைவான சம்பளத்தை கொடுத்து விட்டு நிர்வாகிகளும் ஊர்மக்களும் உலமாக்கள் உலமாக்கள் என்ற வாய் கிழிய கத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது.

ஊரில் ஹோட்டலில் ரொட்டி அடிப்பவர் மற்றும் சாதரண கூலித்தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தது முப்பதாயிரம் ரூபாய்கள் வருமானம் கிடைக்கிறது.

ஆனால் பள்ளி இமாமுக்கு மட்டும் பத்தாயிரம் அல்லது பதினைந்தாயிரம் ரூபாய்கள் கொடுத்து விட்டு அவரை பள்ளிக்குள்ளே முடங்கிக் கிடக்கவேண்டும் என்று நிபந்தனை வேறு.

அரை குறையாக படித்த நிர்வாகிகள் தான் இன்றைய உலமாக்களை பிச்சைக்கார சமூகமாகவும் செல்வந்தர்களுக்கு முன் கைகட்டி நிற்கவும் வைத்துள்ளார்கள்.

தமது மனைவிக்கு பத்தாயிரம் ரூபாய்கள் பெறுமதியான ஒரு சாரி வாங்கிக் கொடுக்கின்ற நிர்வாகிகள் தமது பிள்ளைக்கு சிறு தலைவலி வந்தால் கூட ஸ்கேன் பண்ணி எக்ஸ்ரே எடுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி இமாமின் சொந்த குழந்தை வபாத்தானாலும் கடிதத்தில் கையொப்பம் வாங்கி காலையில் சென்று இரவுக்குள் வந்து விடுங்கள் என்று சொல்வதானது அவர்களை மனித உருவம் கொண்ட மிருகங்கள் என்றே சொல்லவைக்கிறது.

பள்ளி இமாம்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட ஒரு சதம் கூட கூடுதலாக சென்றுவிடக்கூடாது என்று நினைக்கும் நிர்வாகிகள் ஆடம்பர அநாவசியமான தேவையற்ற செலவுக்காக வாரி வாரி இறைக்கிறார்கள்.

பள்ளி இமாமுக்கோ முஅத்தினுக்கோ சம்பளம் கொடுக்கும் போது தனது சொத்திலிருந்து கொடுப்பது போன்ற ஒரு கஞ்சத்தனம் இந்த நிர்வாகிகளுக்கு. இந்த மோசமான நிலை மாற்றப்பட வேண்டும். எமது சமூகம் இது பற்றி சற்று சிந்திக்கவேண்டும்.

இந்த காலத்தை பொறுத்தவரை நடுத்தர குடும்பம் ஒன்றின் நாளாந்திர செலவு குறைந்த பட்சம் ஒருநாளைக்கு ஆயிரம் ரூபா என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இதனை கருத்தில் கொண்டு ஊர்மக்கள் பள்ளி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பள்ளி இமாம்கள் முஅத்தின்மார்கள் விடயத்தில் கரிசனை எடுப்பது சன்மார்க்கக் கடமைகளில் ஒன்றாகும்.

மார்க்கத் தெளிவற்றவர்கள் வட்டி விபச்சாரம் மது சூது களவு பித்தலாட்டம் இவைகளோடு உருண்டு புரள்பவர்கள் வஹியை சுமந்த உலமாக்களை நிர்வகிக்கின்ற நிலையை மாற்றி, படித்தவர்கள் உலமாக்களை ஊரை நிர்வகிக்கின்ற நிலை உருவாக வேண்டும். அதற்காக உழைக்க புத்தி ஜீவிகள் முன்வரவேண்டும் என்பதை எனது தாழ்ந்த அபிப்பிராயமாக முன்வைக்கிறேன்.

ஒரு சமூகம் தமது உலமாக்களை அறிஞர்களை அறிவு ஆன்மீக பொருளாதார அடிப்படையில் முன்னேற்றாதவரை தாம் முன்னேறுவதென்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்.

நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி விரிவுரையாளர்

(பாதிஹ் கல்வி நிறுவனம்) (இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி) (நிறுவனர் : அல்மஹஜ்ஜதுல் பைழா பவுண்டேசன் )

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *