Breaking
Wed. May 22nd, 2024

-நாச்சியாதீவு பர்வீன் –

பாடசாலை என்பது நல்ல மனிதர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகும். நல்ல ஒழுக்கமுள்ள,பண்புள்ள சிறந்த பரம்மரையினரை உருவாக்குவதில் பாடசாலையின் பங்களிப்பு அளப்பெரியது, எனவே கல்வியில் நீங்கள் காட்டும், ஆர்வத்தைப்போலவே ஒழுக்க விழுமியங்களை பேணுகின்ற விடயத்திலும் ஆர்வத்துடன் செயற்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சிரம சக்தி சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினுடாக மட் /மம /ஓட்டமாவடி மத்தி கல்லூரி மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளுக்கான பாதுகாப்பு கொட்டி அமைப்பதற்கான ஆரம்ப வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து அங்கு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

இந்தப்பாடசாலை அடுத்தாண்டில் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்,நூறாண்டுகள் வரலாற்றைக்கொண்ட ஒரு பாடசாலையின் மாணவர்கள் நீங்கள். இந்தப்பாடசாலையின் பழைய மாணவன் என்ற வகையில் நான் மிகுந்த சந்தோசமாக அடைகிறேன்.எனக்கு பல்வேறு பாடங்களை இந்தப்பாடசாலை கற்றுத்தந்துள்ளது.

இந்தப்பாடசாலையில் கற்ற பலர் நல்ல பதவிகளில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றார்கள். அது இந்தப்பாடசாலைக்கு பெருமை தருகின்ற விடயமாகும். இந்தப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் அதிகமதிகமாக பேசுகின்ற ஒரு அரசியல்வாதி என்கின்ற வகையில் உங்கள் வளர்ச்சியும்,முன்னேற்றமும் என்னை சந்தோசப்படுத்துகின்ற விடயமாகும்.

எதிர்காலத்தில் நீங்கள் பலத்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் ஒழுக்கத்துடனான கல்வியை சிறந்த முறையில் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்த வருடம் நிகழவிருக்கும் இந்தப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவை ஒரு தேசிய விழாவாக கொண்டாட நாம் ஏற்பாடுகளை செய்துவருகிறோம்.

அந்த விடயத்தில் இந்தப்பாடசாலைச் சமூகம்,பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் என்பன மிகுந்த சிரத்தையுடன் செயற்பட்டு வருகிறார்கள். அடிக்கடி என்னோடு இதுபற்றி கலந்தோசனை செய்கிறார்கள். நூற்றாண்டு விழாவை இந்தப்பிரதேசத்தின் வெற்றி விழாவாக நடாத்தி முடிக்க சகல தரப்பினருக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என அவர் கூறினார்

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.எச்.எம்.றூவைத். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பாணிப்பாளர் எம்.எல்.என்.எம்.நைறூஸ், பாடசாலை அதிபர் ஜுனைட் பிரதி அதிபர் ஹலீம் இஷ்ஹாக் , கபீர் , பழைய மாணவர் சங்க செயலாளர் சுபைர் , பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *