Breaking
Fri. May 3rd, 2024

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) சபையில் தெரிவித்தார்.

அனர்த்தத்தால் மரணமானவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இச்சபையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம், மண்சரிவு அனர்த்தம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இப் பாராளுமன்றத்தை நிர்மாணிக்கும் போது1000 ஏக்கர் நிலப்பரப்பு தண்ணீர் தேங்கி நிற்பதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று அதில்500 ஏக்கரே எஞ்சியுள்ளது. ஏனையவற்றில் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மண் நிரப்பப்பட்டுள்ளது.எனவே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். சட்டங்களும் தேவையாகவுள்ளன.1975ம் ஆண்டு தொடக்கம் மழை வெள்ளம் தொடர்பில் எனக்கு அனுபவம் உள்ளது.

எனவே கடந்த காலங்களில் இடர் முகாமைத்துவம் தொடர்பில் பாரிய குறைபாடுகள் காணப்பட்டன.அக்குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். அதற்கான திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டும்.

அனர்த்தம் ஏற்பட்ட நாள் தொடக்கம் அனைத்து மத அமைப்புக்களும் பொது மக்களும் சுயேட்சை அமைப்புக்களும் என பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கினார்கள்.

அதேபோன்று வெளிநாடுகளும் உதவின. எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்தனர்.இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரும் தமது ஆதரவை வழங்கினார்கள்.நீண்ட காலத்திற்கு பிறகு நாட்டில் இவ்வாறான பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரம்பக் கட்டமாக உணவு வழங்கப்பட்டது. பாரியளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏனைய அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். அதேபோன்று மக்களுக்கான வசிப்பிடங்களை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டும்.இவையனைத்தையும் அரசாங்கம் முன்னெடுக்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம்.அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

இடர் முகாமைத்துவம் தொடர்பாக பாரிய முறைப்பாடுகள் உள்ளன. எனவே அந்த குறைபாடுகள் நீக்கப்பட வேண்டியதோடு எமக்கு புதிய சட்டங்களும் தேவைப்படுகிறது.

இவ் அனர்த்தத்தின் போது முப்படையினர் பொலிஸாருக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவரும் உதவிகளை செய்தனர் என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *