Breaking
Tue. May 14th, 2024

குழந்தைகளுக்கு விளையாட்டினூடே கற்றல்திறனையும் அதிகரிக்கும் வகையிலான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக பாலஸ்தீனிய நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்களுடன் கூடிய உலகின் சிறந்த ஆசிரியை பரிசு வழங்கப்பட்டது.

கேரளாவில் பிறந்து, துபாயை மையமாக கொண்டு உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை திறந்து நிர்வகித்துவரும் சன்னி வர்க்கி தனது சொத்துகளில் சரிபாதியை உலகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு உதவிடும் நோக்கில் தானமாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த (2015) ஆண்டில் உலகின் சிறந்த ஆசிரியர் விருதுக்காக ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, கென்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆசிரியர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன. இந்தப் பெயர்களையும், கல்விக்காக அவர்கள் ஆற்றிய தொண்டுகளையும் பரிசீலித்த தேர்வுக் குழுவினர், இறுதியாக பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை இந்த சிறப்புமிக்க பரிசுக்கு தேர்வு செய்தனர்.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் பிரதமரும், துபாய் மன்னருமான ஷேக் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பரிசுக்குரிய பாலஸ்தீன ஆசிரியையான ஹனான் அல் ஹ்ரோப்-பின் பெயரை உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுருவான போப் பிரான்சிஸ் வீடியோ மூலமாக அறிவித்தார்.

குழந்தைகளுக்கு விளையாட்டினூடே கற்றல்திறனையும் அதிகரிக்கும் வகையிலான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக இவருக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக அறிவித்த போப் பிரான்சிஸ், சமூகத்தோடு எப்படி ஒன்றிணைந்து வாழ்வது என்பதையும், வாழ்வின் மகிழ்ச்சியையும் விளையாட்டுசார்ந்த கல்வியின் மூலமாக குழந்தைகள் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இதேபோல், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்பட பலரும் இந்த விழாவை வாழ்த்தி ஆடியோ செய்தி வெளியிட்டிருந்தனர்.

பெத்லகேம் நகரில் உள்ள அகதிகள் முகாமில் வளர்ந்து, பெருமைக்குரிய பாலஸ்தீன ஆசிரியையாக இந்த மேடையில் நிற்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன் என்றும் பரிசுத்தொகையின் பெரும்பகுதியை தனது புதிய கல்விமுறையை மேம்படுத்தி, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவும், இதர ஆசிரியர், ஆசிரியைகளின் நலனுக்காகவும் செலவழிக்கப் போவதாகவும் பரிசை பெற்றுகொண்ட ஹனான் அல் ஹ்ரோப் தெரிவித்துள்ளார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *