Breaking
Tue. May 14th, 2024
பிரிட்டனர் வாழ் இலங்கை முஸ்லிம்கள் மியன்மார்  முஸ்லிம்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளவுள்ள போரட்டத்திற்கு ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் தனது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் தெரிவித்துள்ளதாவது,
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை முஸ்லிம்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஐரோப்பாவில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் பல விடயங்களை சாதிக்கமுடியும்.
இலங்கை முஸ்லிம்கள் பௌத்தசிங்கள இனவாதிகளின் அடக்குமுறைகளை எதிர்கொண்டபோது, அதனை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு செல்லவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடவும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியது. ஜெனிவாவில் போராட்டமொன்றையும் முன்னெடுத்தது. ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்திற்கு சுவிஸ் நாட்டை அண்மித்த நாடுகளைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்துகொண்டு தமது ஒத்துழைப்பை நல்கியிருந்தனர்.
இலங்கை முஸ்லிம்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட வன்முறைகளுக்கும், மியன்மார் முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள்ளும் வன்முறை சம்பவங்களும் ஒத்த போக்குடைய தன்மை காணப்படுவதை நாம் அவதானிக்கிறோம்.
இந்நிலையில் இலங்கையில் வாழும் எமது சகோதரர்கள், முஸ்லிம் அமைப்புக்கள் மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தியுள்ளதை நாம் காணுகிறோம்.
தற்போது பிரிட்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களும் மிக நியாயபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் சனிக்கிழமை, 6 ஆம் திகதி ஆர்ப்பாட்டததையும், கண்டன கூட்டததையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இவற்றுக்கு ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் தனது பூரண ஆதரவை வழங்குகிறது. சுவிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களும் பிரிட்டனில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டுமென ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் பகிரங்க அழைப்பு விடுக்கிறது எனவும் ஹனீப் மொஹமட் மேலும் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *