Breaking
Sat. Apr 27th, 2024

மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சீற்றம்.

வன்னி மாவட்ட தமிழ் மக்களினது அபிலாஷைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கருத்துக்களைக் கூற மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் பழகிக்கொள்ள வேண்டுமென்று முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு பிரதேச சபைகளை  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமை தொடர்பிலும், அந்த பிரதேச மக்கள் வழங்கிய ஆணைகளை கொச்சைப்படுத்தியும் கேலி செய்தும் ஐய்யூப் அஸ்மின்  அறிக்கை வெளியிட்டமை குறித்தும் கருத்து வெளியிட்ட போதே பிரதேச சபைத் தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது

வடமாகாண சபையில், வானத்தில் வந்து குதித்து தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து அரசியல் செய்யும் அஸ்மினுக்கு வன்னிப்பிரதேச மக்களின் துன்ப துயரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் வன்னி மாவட்டத்தில் வாழ்ந்த மக்கள் பட்ட துன்பங்களை இவர் நேரில் எப்போதவாவது பார்த்திருப்பாரா?

யுத்த காலத்தில், வடக்கின் வாடையே தெரியாது தென்னிலங்கையில் வாழ்ந்து, சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடமாகாண சபைக்கு டிப் டொப் ஆடைகளுடன் அமர்வுகளுக்கு மாத்திரமே வந்து போகும் அஸ்மினுக்கு தமிழ் மக்கள் யுத்த காலத்தில் பட்ட துன்ப துயரங்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் ஊடகங்களின் வாயிலாக மாத்திரமாகவே அறிந்திருக்க முடியும்.

கடும் யுத்தத்தில் சிக்கி, உயிரிழந்து போனவர்களைத் தவிர எஞ்சியோர் ஊனமுற்ரும் பாதிக்கப்பட்டும் அபலைகளாக வவுனியா மெனிக் பாமிற்கு வந்த செய்திகளும் யுத்தச் செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டும் தணிக்கை செய்யப்பட்டும் திரிபுபடுத்தப்பட்டும் வெளியானதை இவர் ஊடகங்கள் வாயிலாக சில வேளை அறிந்திருக்கலாம்.

ஆனால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டும் ஊனமுற்றும் குற்றுயிராக ஓடி வந்த போது அவர்களை சகோதர வாஞ்சையுடன் அரவணைத்து, ஆறுதலளித்து, வயிற்றுப் பசியை போக்கியவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனே.

தனது சமூகமும் தானும் இதே போன்று 1990 இல் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போது பட்ட கஷ்டங்களின் பட்டறிவினால் அவர் எமக்கு முடிந்தவரை பல உதவிகளை  செய்திருக்கின்றார்.

அவர் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தமையினால் அரசாங்கத்தின் உதவியுடனும் தனது தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தியும் எமக்கு உச்சளவில் உதவினார்.

கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் அவரைத்தான் நம்பினோம், எண்ணினோம். தமிழ்க் கட்சிகள் சார்ந்த எவரும் நாம் துன்பப்பட்டிருந்த போது, தக்க சமயத்தில் எம்மை எட்டிப் பார்க்கவுமில்லை, உதவி செய்யவுமில்லை என்பதை அஸ்மின் போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தனக்குப் பதவி தந்த கட்சி ஒன்றுக்கு மகுடியாக செயற்படும் அஸ்மின், உண்மைகளை கேட்டறிந்தாவது கருத்துக்களைச் சொல்ல வேண்டும். உயிரையும் துச்சமென மதித்து, பாதுகாப்புக்களைப் பொருட்படுத்தாது, குண்டுச் சத்தங்களுக்கும் கண்ணி வெடிகளின் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலே எல்லைப் பிரதேசம் வரை வந்து எம்மை அரவணைத்த அமைச்சர் றிஷாட் பதியுதீனை தூற்றுவதை அஸ்மின் நிறுத்தாவிட்டால் பாதிக்கப்பட்ட வன்னித் தமிழ் மக்களின் சாபம் அவரை விட்டு வைக்காது.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் எங்கள் மீது கொண்ட அன்பினாலேயே   மனிதாபிமானப் பணிகளையும்; யுத்தத்தின் பின்னரான எமது பிரதேச துரித மீளக்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளையும்  மேற்கொண்டார். அவர் மீதான எமது பற்று மேலோங்கியதற்கு இதுவே காரணமாகும்.

இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் ஜனநாயக முறைப்படி, தமிழ் மக்கள் வாக்களித்தனால் சில பிரதேச சபைகளில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  அதிக  பிரதிநிதிகனைப் பெற்று ஆட்சியமைத்துள்ளது.

எனவே   பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் அரசியலை ஐயூப் அஸ்மின் இனியாவது கைவிட வேண்டும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *