Breaking
Sun. May 19th, 2024

வாசனைகளுக்கு பழகிவிட்டது நவீன மூக்கு. காலையில் கண் விழிப்பதில் தொடங்கி இரவு இமை மூடும் வரை நம்மை சுற்றி வாசனையாக இருப்பதை போல பார்த்துக் கொள்கிறோம். முன்பெல்லாம் பெட்ரூமுக்கு மட்டும்தான் ரூம் ஃப்ரெஷ்னர். இப்போது காரில்கூட ஃப்ரெஷ்னர் அடித்துவிட்டுதான் வண்டியை ஸ்டார்ட் செய்கிறோம். டூத்பேஸ்டில் தொடங்கி, இரவில் வாய் கொப்பளிக்கும் மவுத்வாஷ் வரை ஒரு நாளைக்கு குறைந்தது பதினைந்து மணி நேரமாவது வாசனையாக இருக்கிறோம். சில பேருக்கு தூக்கத்தில்கூட ஏதோ வாசனையை நுகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

சோப்பு, ஷாம்பூ, ஹேர் ஆயில், ஹேர் க்ரீம், கலோன், ஆஃப்டர் ஷேவ் லோஷன், டியோடரன்ட், சென்ட், பெர்ஃப்யூம், லோஷன், ஃபேஸ் க்ரீம் என்று நம்மை வாசனை ஆக்கிக் கொள்ளதான் எவ்வளவு விஷயங்கள் தயாரிக்கப்படுகின்றன. உலகில் இன்று பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நம் மூக்கை மட்டுமே குறிவைத்து நடந்து கொண்டிருக்கிறது. தத்தம் வாசனையை நுகரச் சொல்லி எவ்வளவு கவர்ச்சி யான, குயுக்தியான விளம்பரங்கள்? நாம் அந்த பஞ்சாயத்துக்குள் எல்லாம் நுழையவேண்டாம். நம்முடைய பிரச்னைக்கு நேரடியாக வருவோம்.

செயற்கை ரசாயனங்கள், நம்முடைய தோலில் நேரடியாக படுவதும், சுவாசம் மூலமாக நுரையீரலுக்கு செல்வதும் உடலுக்கு கேடு என்பது தான் விஷயம். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களை மிக அதிகமாக இந்த ரசாயனங்கள் பாதிக்கின்றன. a rose is a rose is a rose is a rose என்பார்கள். இன்று நாம் ரோஜாவின் மணம் என்று நம்பிக்கொண்டு சுவாசிக்கும் வாசனைக்கும் ரோஜாப் பூவுக்கும் என்ன சம்பந்தம். ரோஜாவின் வாசனையை ரசாயனங்கள் மூலம்தானே உருவாக்கிக் கொடுக்கிறார்கள்?

நாம் உணரும் வாசனையில் 95% பெட்ரோலிய கெமிக்கல்களை கச்சாப் பொருட்களாக கொண்டவை. நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ளுமாறு சொல்ல வேண்டுமானால் சிகரெட் பிடிப்பதும், இந்த ரசாயன வாசனையை சுவாசிப்பதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாதிப்பையே தரும். சிகரெட் புகையில் இருக்கும் நச்சுப்பொருட்களும் இதே தன்மை கொண்டவைதான். கும்மென்று வாசனை தூக்க ஜம்மென்று நாம் ‘ஸ்ப்ரே’விக் கொள்ளும் டியோடரன்டுகள் மற்றும் ஃபெர்ப்யூம்களின் நிஜமான லட்சணம் இதுதான்.

இவை மட்டுமல்ல. இன்று வாசனை தரக்கூடிய எல்லா பொருட்களிலுமே இந்த ரசாயனங்கள் (குறிப்பாக தீங்கு தரக்கூடியவை என்று பதினாறு வகை ரசாயனங்களை அறிவியலாளர்கள் பட்டியலிடு கிறார்கள்) நீக்கமற நிறைந்திருக்கின்றன.இதனால் ஏற்படக்கூடிய தலைவலி, சைனஸ் மாதிரியான ரெகுலர் கந்தாயங்களை விடுங்கள். கூடுதலாக நம்முடைய மரபணுக்களின் தன்மையையே மாற்றிவிடக்கூடிய அளவுக்கு அபாயம் கொண்டவை இந்த ரசாயனங்கள். ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தி குறையக்கூடிய ஆபத்து இருக்கிறது. நுரையீரலை பாதிக்கலாம். சில வகை ரசாயனங்கள் நம் தோலின் இயல்பான உறிஞ்சும் தன்மையை இழக்கவும் செய்துவிடும்.

pleasant atmosphere என்கிற பெயரில் அலுவலகம், திரையரங்கம், ஹோட்டல், மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களில் காற்றில் கலக்கக்கூடிய செயற்கை வாசனை திரவியங்களை பரவவிடும் கலாசாரம் உருவாகியிருக்கிறது. இது இயற்கையான காற்றில் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய அனுகூலங்களை மறுத்து, கேடு விளைவிக்கும் ரசாயனங்களை உள்ளே செலுத்துகின்றன.‘எந்தப் பழக்கமும் இல்லை. சின்ன வயசுதான். அநியாயமா இந்த நோய் வந்துடிச்சே?’ என்று யாருக்கோ, எப்போதாவது ‘உச்சு’ கொட்டிக் கொண்டிருக்கிறோம் இல்லையா. இன்று யாருக்கேனும் ஏதேனும் உயிர்க்கொல்லி நோய் ஏற்பட குறிப்பிட்ட தீயப்பழக்கம் எல்லாம் அவர்களுக்கு இருந்தாக வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு மனிதனின் உடலுக்கு வெளியேயும் தீயப்பழக்கம் தரக்கூடிய கேடுகளுக்கு நிகரான அம்சங்களை நாகரிகத்தின் பெயரால் நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம்.

அமெரிக்கா – கனடா போன்ற நாடுகளில் இந்த ஆபத்துகளை இப்போது உணர்ந்து வருகிறார்கள். ஏனெனில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் அமெரிக்கர்களுக்கு குறைந்தபட்ச நேரத்துக்கு கூட தூங்கமுடியாத பிரச்னை உருவாகி இருக்கிறது. காற்றிலிருந்து சுவாசிக்கும் ரசாயனங்களால் இவை ஏற்படுகின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். Scent free policy என்கிற கொள்கை வரைவினை இப்போது அங்கே சமூக ஆர்வலர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இயற்கையான காற்றை சுவாசிப்பது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. அதை மறுக்கும் வகையில் பொது இடங்கள் செயற்கையாக வாசனைப் படுத்தப்படுவதை அரசுகள் சட்டம் போட்டு தடுக்க வேண்டும் என்கிற உரிமைக்குரல் எழும்பத் தொடங்கியிருக்கிறது.

பொதுவாக ஒரு நறுமணப் பொருள் குறைந்தபட்சம் பதினான்கு ரகசிய ரசாயனங்களை உள்ளடக்கியிருக்கிறது. தொழில் ரகசியம் என்பதால் லேபிளில் அப்பொருளை தயாரிக்க என்னென்ன ரசாயனங்கள் உபயோகப்படுத்தப்பட்டது என்று சொல்ல தேவையில்லை என்பது இன்றைய நிலை. வாசனை தயாரிப்புகளில் இடம்பெற்றிருக்கும் ரகசிய கெமிக்கல்கள் எவை எவையென்று லேபிள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை அதை பயன்படுத்தும் நுகர்வோருக்கு உண்டு.நாம் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களின் லேபிளிலேயே அதை தயாரிக்க உதவிய கச்சாப் பொருட்களை பட்டியலிட்டாக வேண்டும் என்பது சட்டம். அப்படியிருக்க நறுமணப் பொருட்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை என்பது தெரியவில்லை.

மது குடிப்பதும், புகை பிடிப்பதும் மட்டுமே உடல்நலத்துக்கு கேடு என்று விழிப்புணர்வுப் பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றுக்கு இணையான கேட்டினை தரக்கூடிய இந்த விஷயங்களை பற்றியும் மக்களுக்கு அரசு எடுத்துச் சொல்ல வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமைக்கு உள்ளானவர்கள். சரி, செயற்கை வாசனைப் பொருட்கள் இனிமேல் வேண்டாம் என்றே வைத்துக் கொள்வோம். வாசனைக்கு பழகிப்போன நம் மூக்குகளுக்கு வேறென்ன நிவாரணம்? அறையை வாசனையாக்க சாம்பிராணி பயன்படுத்தலாம்.

பூக்கள் கொண்டு அலங்கரிக்கலாம். உடலுக்கு ஜவ்வாது போன்ற நம் பாரம்பரிய வாசனைத் திரவியங்களை புழக்கத்துக்கு கொண்டுவரலாம். பெண்கள் மல்லிகைப்பூ சூடலாம். இன்னும் எவ்வளவோ தீர்வுகள். நமக்கு தெரியாததா என்ன?உலகின் சர்வ பிரச்னைகளுக்கும், தேவைகளுக்கும் இயற்கையே தன்னிடம் தீர்வை கொண்டிருக்கிறது இல்லையா. இலைகளையும் மலர்களையும் விடவா சிறந்த வாசனைகளை இந்த செயற்கை வாசனை திரவிய தயாரிப்பாளர்கள் உருவாக்கிவிடப் போகிறார்கள்?

‘செடி, கொடிகள், மரங்கள் எல்லாம் மருத்துவ மாணிக்கங்கள். காடுகளிலும் மேடுகளிலும் சாலைகளிலும் அதுவாக பூத்திருக்கும் பூக்களை கண்ணால் வெறும் காட்சியாகதான் மடையன் பார்க்கிறான். அறிவுள்ளோர்தான் மனசால் பார்க்க முடியும்’ என்று ஓர் இயற்கையியலாளர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்னார். நமக்கெல்லாம் அறிவு இருக்கிறதுதானே?

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *