Breaking
Thu. May 16th, 2024

பௌத்த விகாரைகளை மையமாகக் கொண்ட நவபாசிச அமைப்பொன்றை உருவாக்குவதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவான எஸ்ஐஎஸ் பிரிவினர் இது தொடர்பான புலனாய்வு அறிக்கையொன்றையும் தயாரித்துள்ளனர். அதன் ஒரு பிரதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நோக்கில் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நவபாசிச அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த தேரர்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, விகாரைகளை மையமாகக் கொண்டு செயற்படுகின்றது.

இது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே மஹிந்த ராஜபக்ச அண்மைக்காலமாக அடிக்கடி விகாரைகளுக்கான விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.

தற்போது இந்த அமைப்பு இலங்கை முழுவதும் அமைப்பு ரீதியாக நன்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே தலைமையின் அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த அமைப்பில் உள்ளவர்கள் தங்களுக்குள் தனியான தொடர்பாடல் வலையமைப்பொன்றையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் இந்த அமைப்பின் ஊடாக தன்னையும், தனது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வதில் மஹிந்த ராஜபக்ச தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஊழல், நிதிமோசடி, கொலை போன்ற பாரிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் தனது குடும்ப அங்கத்தினர்கள் எவரேனும் கைது செய்யப்படுமிடத்து, உடனடியாக இலங்கை முழுவதும் பௌத்த பிக்குமாரின் தலைமையில் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடுவது அவரது நோக்கமாக உள்ளது.

குறைந்த பட்சம் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவ்வாறான தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வன்முறை சூழலை ஏற்படுத்தி தனது குடும்பத்தினரை தப்புவித்துக் கொள்ள மஹிந்த எதிர்பார்த்துள்ளார்.
இந்த பாசிச அமைப்பை உருவாக்குவாதில் தனது முன்னைய சகாக்களான பொதுபலசேனா, ராவணா பலகாய போன்ற அமைப்புகளை நம்பியிராது மஹிந்த தானே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.

மஹிந்தவின் இந்த நடவடிக்கைகள் தற்போது புலனாய்வுப் பிரிவினரால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதுடன், எதிர் நடவடிக்கைகள் தொடர்பிலும் தீவிர கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அறியக் கிடைத்துள்ளது.

-Engalthesam-

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *